மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 மா 2018

மின்னம்பலம் குறுந்தொடருக்கு எதிர்வினை!

மின்னம்பலம் குறுந்தொடருக்கு எதிர்வினை!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 23

இராமானுஜம்

சேலம் சிண்டிகேட் செயல்பாடு எப்படி என்று பிரபல விநியோகஸ்தர் சேலம் சிவா, மின்னம்பலத்தில் வெளியாகும் குறுந்தொடருக்கு எதிரான தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் தற்போதுள்ள 20 முன்னணி விநியோகஸ்தர்களில் சேலம் 7G நிறுவன உரிமையாளர் சிவா தவிர்க்க முடியாதவர். கடந்த பத்தாண்டுகளாக அவ்வப்போது சில படங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும், கடும் போட்டிக்கு இடையில் சேலம் ஏரியாவுக்குத் தொடர்ந்து புதிய படங்களின் உரிமையை வாங்கி வெளியிட்டு வருபவர்.

மின்னம்பலத்தில் வருகின்ற குறுந்தொடரில் சேலம் சிண்டிகேட் பற்றி அவரது கருத்து.

சேலம் சிண்டிகேட் பற்றி குறிப்பிடும்போது, என்னைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, அது சம்பந்தமாக எனது கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டியது என் கடமையாகிறது.

ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘லிங்கா’ படத்துக்கு தியேட்டர் ஒதுக்கீட்டில் எம்.ஜி. இல்லையென்றால் சிண்டிகேட் அமைப்பில் உள்ள தியேட்டர்களுக்குப் படம் இல்லை என்று நான் கூறினேன். இதனால் அவர்களுடன் எனக்கு மோதல் ஏற்பட்டது. ‘என்னை அறிந்தால்’ படத்தின் சேலம் விநியோக உரிமையை நான் வாங்கி இருந்தேன்.

லிங்கா படத்தை எங்களுக்குக் கொடுக்காத சிவா வாங்கியுள்ள, என்னை அறிந்தால் படத்துக்கு தியேட்டர் தர மாட்டோம் என்று சிண்டிகேட் அமைப்பு கூறியது. அது முடிந்து போன கதை.

அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் சேலம் ஏரியா உரிமையையும் நான் வாங்கியிருந்தேன். அந்தப் படம் திரையிடுவதில் சிண்டிகேட்டுக்கும் எனக்கும் இருந்த பிணக்கு தீர்ந்து நல்லுறவு மலர்ந்தது. பிற விநியோகஸ்தர்களுக்கு எப்படியோ, சேலம் ஏரியாவுக்கு நான் வாங்கும் படங்களுக்குத் தொழில்ரீதியாக நான் கேட்கும் அட்வான்ஸ் தொகையைக் கொடுக்கிறது சிண்டிகேட். அதேபோல் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர்களில் மட்டுமல்லாது, அதே ஊர்களில் எனக்கு வேண்டிய தியேட்டர்களில் நான் படங்களை திரையிடுவதை சிண்டிகேட் தடுப்பது இல்லை. தர்மபுரி, ஆத்தூர், திருச்செங்கோடு ஊர்களில் இருக்கும் தியேட்டர்களுக்குத் தொடர்ந்து புதிய படங்கள் வேண்டும் என்பதற்காக உருவானது சிண்டிகேட் அமைப்பு.

விநியோகஸ்தர் சேலம் சிவா

சேலம் விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் மோதல் போக்கைத் தொடர்ந்த அசோக் சாம்ராட் தனியாக விநியோகஸ்தர்கள் சங்கம் தொடங்கினார். ஏற்கெனவே இருக்கும் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு எதிராக சிண்டிகேட் அமைப்பைப் பலப்படுத்த தனித் திரையரங்குகளை நடத்திக் கொண்டிருந்தவர்களை சிண்டிகேட்டில் கொண்டு போய் இணைத்தவர் அசோக் சாம்ராட். அந்தத் தியேட்டர்களுக்குப் புதிய படங்கள் திரையிட ஏற்பாடு செய்வதை சிண்டிகேட் அமைப்பு பொது சேவையாகச் செய்து வருகிறார்கள். அதற்காக மற்ற ஏரியாக்களை போல 3%, 5% கமிஷன் வாங்குவது இல்லை. எனக்கும் சிண்டிகேட் அமைப்புக்குமான உறவு ஆரோக்கியமாக, நம்பிக்கைக்குரிய நட்பாக தற்போது இருக்கிறது.

சமீபத்தில் ரிலீஸான ‘ஸ்கெட்ச்’ படத்துக்கு எனக்கு வர வேண்டிய பாக்கித் தொகை கிடைப்பதற்கு சிண்டிகேட் அமைப்புதான் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஏரியாக்களிலும் எனது 7G நிறுவனம் மூலம் புதிய படங்களை ரிலீஸ் செய்துள்ளோம். மற்ற ஏரியாக்களில் தியேட்டர்களைக் குழுவாக வைத்துள்ளவர்கள் திரையிட்ட படங்களுக்குக் கொடுக்கும் டேம்ஸ் (விகிதாசாரம் 50% - 50%) மிக குறைவாகத்தான் தற்போதும் கொடுத்து வருகிறார்கள்.

படம் ஓடி முடித்தாலும் 90 நாள்கள் கழித்துதான் வசூல் தொகையை கொடுக்கும் சிண்டிகேட் குரூப்களும் உள்ளன. கொடுக்கிற வசூல் கணக்கில் கேள்வி கேட்டால் அடுத்த முறை படம் போட முடியாது எனக் கூறுகிற சிண்டிகேட்டும் தமிழ்நாட்டில் உள்ளது. அதை நேரடியாக அனுபவித்தவன் நான். எனது அனுபவத்தில் சேலம் சிண்டிகேட் அப்படி இல்லை. என்னுடன் மட்டும் அல்ல; புதிதாகப் படம் வாங்குபவர்களுடனும் நல்ல புரிதலுடன் சிண்டிகேட் அமைப்பு செயல்படுகிறது.

தமிழ் சினிமாவில் 1990களில் சென்னைக்கு அடுத்தபடியாக ஒரிஜினல் DCR கணக்குகளுக்கு கரூர் நகர தியேட்டர்களையும் குறிப்பிடுவார்கள். ஆனால், இப்போது அப்படிக் கூற முடியாது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக ராதா - மீனாட்சி சுந்தரம் தலைமையில் உருவான முதல் சிண்டிகேட்தான் தமிழகத்தில் ஆங்காங்கே சிண்டிகேட் அமைப்பை உருவாக்க நம்பிக்கையைக் கொடுத்தது. யாராயிருந்தா எனக்கென்ன என்பது போல் எந்தப் படமாக இருந்தாலும் தன் விதிமுறைகளை ஏற்காத படங்களுக்கு தியேட்டர் வழங்கப்பட மாட்டாது. அப்படி இவர்களால் நிராகரிக்கப்பட்ட படம் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘எந்திரன்’. இந்தப் படம் இன்று வரை கரூர் நகரில் உள்ள எந்தத் திரையரங்கிலும் திரையிடப்படவில்லை.

படங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுத் தர மாட்டார்கள். என்ன டேம்ஸ் எனக் கூற மாட்டார்கள். படம் ஓடி முடிந்து 90 நாள்கள் கழித்து தான் வசூல் தொகை விநியோகஸ்தருக்குக் கிடைக்கும். அப்படியென்றால் பெரிய அளவில் அட்வான்ஸ் கொடுப்பார்களா என்றால் இல்லை என்கிறார்கள். சில பெரிய படங்களுக்கு, பழைய விநியோகஸ்தர்களுக்குக் கருணை அடிப்படையில் அட்வான்ஸ் கொடுப்பார்கள் என்கிறார்கள்.

இந்த அராஜகத்தைத் திரைப்பட சங்கங்கள் கேட்கவில்லையா என்றால், சங்கத் தலைவர்தாங்க சிண்டிகேட் அமைப்புக்கே பொறுப்பு என்கிறார்கள். இதே கூத்துதான் வேலூர் பகுதியிலும் இனிப்பான தலைவர் தலைமையில் நடக்கிறதாம்.

வேலியே பயிரை மேய்கிறதா? நாளை...

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 22 மா 2018