மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

சினிமா அம்பானியாக சீனு ஆனது எப்படி?

சினிமா அம்பானியாக சீனு ஆனது எப்படி?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 28

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் மதுரை என்றால் அன்பு செழியன், கோவை என்றால் திருப்பூர் சுப்பிரமணியம், ராஜமன்னார், திருச்சி என்றால் அடைக்கலராஜ், அவருக்குப்பின் அவரது மகன் பிரான்சிஸ், பரதன் பிலிம்ஸ், செங்கல்பட்டு ஆனந்தா பிலிம்ஸ், ஆஸ்கார் பிலிம்ஸ், GM பிக்சர்ஸ் என திரைப்படத் துறையில் கடந்த கால் நூற்றாண்டுகளில், விநியோகத் துறையில் அல்லது திரையரங்கத் தொழில் அல்லது ஃபைனான்ஸ் தொழிலில் அடிமட்டத்திலிருந்து அனுபவ அறிவில் சினிமாவில் முன்னுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள்.

இதில் சிலர் வரம்பு கடந்து அதிகாரம் மிக்க இடத்தில் தங்கள் நலனுக்காக மட்டும் அமைப்பைப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். சில நிறுவனங்கள் காணாமல்போனதும் நிகழ்ந்திருக்கிறது. இதில் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தின் சீனு, தமிழ் சினிமாவின் வியாபாரம், விநியோகம், திரையிடல் என மூன்று ஏரியாக்களையும் தமிழகம் முழுமையும் தீர்மானிக்கும் அசுர பலம் கொண்ட சக்தியாக இன்று வளர்ந்திருப்பது தமிழ் சினிமாவின் அதிசயம்.

குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பார்கள். தொழில் கற்றுக்கொடுத்தவனையே சுத்தலில்விட்ட மனுஷன் என்பார்கள். கற்பூரப் புத்தி என்பார்கள். இவற்றுக்கெல்லாம் ஒரே உதாரணம் எஸ்.பிக்சர்ஸ் சீனு எனத் தமிழ் சினிமா துறையினர் கூறுகின்றனர்.

முதுகலை பட்டதாரியான இளைஞர் சீனு, சிவக்குமார் என்கிற விநியோகஸ்தரால் 1999 காலகட்டத்தில் விநியோகத் துறைக்கு வேலூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர். சிவக்குமாரிடம் தொழில் கற்றுக்கொண்டவர், அவரை சுத்தலில்விட்டுத் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியபோது அடைக்கலம் கொடுத்தவர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அவரிடம் சினிமா வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்ட கற்பூர புத்திக்காரர், அவருக்கே ஆட்டம் காண்பித்தது தனிக்கதை.

தமிழ் சினிமாவில் 1999 காலகட்டம் வடஆற்காடு - வேலூர் பகுதி சினிமா விநியோகத்தில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கொடிகட்டிப் பறந்த நேரம். இவர் கண் அசைவுக்குத் திரையரங்குகள் கட்டுப்பட்டு, கொடுத்த படங்களைத் திரையிடுவார்கள்.

வேலூரில் இருந்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் தொழில் ரீதியாகச் சென்னையை மையமாகக்கொண்டு செயல்படத் தொடங்கிய நேரத்தில் விநியோகத் துறைக்குள் நுழைந்தவர் சீனு. தன்னைத் தொழிலுக்கு அழைத்துவந்த சிவக்குமாரிடம் இருந்து பிரிந்த பின் தொழில் ரீதியாக ஆஸ்காரிடம் நட்பு பாராட்டிய சீனு, அவர் செய்த ஒரு தவற்றை இன்று வரை செய்யவில்லை. ஆம், சொந்தமாகப் படம் தயாரிக்கவில்லை

ரவிச்சந்திரன் விநியோகத் துறையில் இருந்தவரையில் திரையரங்குகளை வாங்க முடிந்தது, தென்னிந்தியா முழுவதும் புதிய படங்களை விநியோகம் செய்ய முடிந்தது. தமிழ்ப் படத் தயாரிப்புக்கு வந்த பின் இவை அனைத்தும் அவரது கைவிட்டுப்போனது. இதை அனுபவமாகக்கொண்டு ஆஸ்கார் ரவிச்சந்திரன் சாம்ராஜ்ஜியம் சரிவைச் சந்தித்தபோது, வடஆற்காடு விநியோகத் துறையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் சீனு.

அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் திரையரங்குகளைக் குத்தகைக்கு எடுத்து நடத்தத் தொடங்கிய பிரமிட் சாய்மீராவின் ஆஸ்தான பிரதிநிதியாக வேலூர் ஏரியாவில் செயல்பட்ட சீனுவுக்கு விநியோகமும், திரையிடலும் அத்துப்படியானது.

பிரமிட் சாய்மீரா சரிவைச் சந்தித்தபோது திரையரங்குகளைக் காக்கும் கடவுளாக மாறினார் சீனு. அனைத்து தியேட்டர்களுக்கும் புதிய படங்களுக்கு நான் பொறுப்பு எனக்கு சர்வீஸ் கட்டணம் 5% கொடுத்தால் போதும் என்ற நிபந்தனையுடன் களமிறங்கினார். அட்வான்ஸ் இல்லை, தொடர்ந்து படம் கிடைக்கிறதே என்கிற மயக்கத்தில் சீனுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன திரையரங்குகள்.

சினிமாவில் ஒரு திரையரங்கு என இருந்தால் அதன்மூலம் பலருக்கும் வேலை கிடைக்கும். தொழில் நடக்கும். படங்களை உறுதி செய்து கொடுப்பதின் மூலம் ஒருவர் பிழைப்பு நடக்கும். அந்தத் தியேட்டரில் புதிய படங்களைத் திரையிட விநியோகஸ்தருக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு ஃபைனான்ஸ் கொடுப்பதன் மூலம் தொழில் நடக்கும். புதிய படங்கள் திரையிடும்போது பட பிரதிநிதியாக ஒருவருக்கு வேலை கிடைக்கும். இந்த வேலை, தொழில் வாய்ப்புகளை வேலூர் ஏரியாவில் இல்லாமல் செய்தவர் சீனு. மொத்த தியேட்டர்களுக்கும் அவர் ஒருவரே கன்பார்மர் ஆக ஆதிக்கம் செய்ய தொடங்கிய பின் நடந்த அதிசயங்கள் தமிழ் சினிமாவின் எவருக்கும் நடக்காதது. வேலூர் ஏரியாவில் எந்தப் படமும் லாபகரமாக ஓடுவதில்லை என்பது தமிழ் சினிமாவின் கூற்று.

ஒரு திரைப்படம் எடுத்தவரால் லாபம் சம்பாதிக்க முடியவில்லை. அடுத்து அந்தத் தயாரிப்பாளரால் புதிதாகப் படம் தயாரிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களின் படங்களை விநியோகம் செய்கிறவர்களால் அடுத்தடுத்து படங்கள் வாங்க முடிகிறது. புதிய திரையரங்குகளை வாங்க முடிகிறது. இதற்கு உதாரணப் புருஷர் சினிமா அம்பானி சீனு. இது எப்படி சாத்தியமானது?

நாளை காலை 7 மணி அப்டேட்டில்...

குறிப்பு:

இத்தொடர் தமிழ் சினிமா நலன் கருதி தனி மனித விமர்சனம் தவிர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக எழுதப்பட்டு வருகிறது. விமர்சனத்துக்கு உள்ளானவர்களின் தனித்தன்மையை குறிப்பிடவும் நாம் தவறுவதில்லை. இக்கட்டுரை பற்றிய கருத்துகளைப் பதிவு செய்தால் வெளியிடத் தயார் என்ற அறிவிப்பும் வெளியிட்டபின் பொதுவெளியில் தியேட்டர் உரிமையாளர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் வெளியான கமெண்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 7 மணி பதிப்பில் கட்டுரையாளரின் பதில்.

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon