மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

ஏப்ரல் 27இல் கொரிய அதிபர்கள் சந்திப்பு!

ஏப்ரல் 27இல் கொரிய அதிபர்கள் சந்திப்பு!

வடகொரியா அதிபர் கிம் ஜோங் வுன் மற்றும் தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் இடையிலான சந்திப்பு வரும் ஏப்ரல் 27ஆம் தேதியன்று நடைபெறுமென, நேற்று (மார்ச் 29) இரு நாட்டின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையேயான பகைமையைத் தீர்க்கும் பொருட்டு, பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற குரல் கடந்த சில ஆண்டுகளாக ஒலித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா அணியினர் கலந்துகொண்டனர். அந்தப் போட்டியைக் காண தென்கொரியாவுக்குச் சென்றார் தற்போதைய வடகொரியா அதிபர் கிம் ஜோங் வுன் சகோதரி கிம் ஜோ யோங்.

கடந்த 2007 மற்றும் 2000 ஆண்டுகளில் கிம்மின் தந்தை கிம் ஜோங் இல் மட்டுமே தென்கொரியா சென்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, முதன்முறையாக கிம்மின் சகோதரி தென்கொரியா சென்றார். அப்போதே, தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னிடம் வடகொரியா அதிபர் கிம்மை விரைவில் சந்திக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், நேற்று (மார்ச் 29) இருநாட்டு எல்லையை ஒட்டிய பன்முஞ்சோம் என்ற இடத்தில், இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்துப் பேசினர். இதனையடுத்து, வரும் ஏப்ரல் 27ஆம் தேதியன்று வடகொரியா மற்றும் தென்கொரியா அதிபர்கள் சந்திப்பதென முடிவானது. இருநாட்டு அதிகாரிகளின் கூட்டறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டது.

அதற்கு முன்னதாக, வரும் ஏப்ரல் 4ஆம் தேதியன்று இரு நாட்டு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருநாட்டு அதிபர்கள் சந்திப்பிற்கான பாதுகாப்பு அம்சங்கள், ஊடகங்களுக்கான வசதிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

2011ஆம் ஆண்டு கிம் ஜோங் வுன் அதிபராகப் பதவியேற்றபிறகு, இருநாட்டு அதிபர்களும் நேராகச் சந்தித்து முதல்முறையாகப் பேசவுள்ளனர். வடகொரியாவின் அணுஆயுதச் சோதனை குறித்தான விவாதம் இதில் பிரதான அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தென்கொரியாவின் அதிபராகப் பதவியேற்ற மூன், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட எத்தகைய நடவடிக்கையிலும் தயார் என்று தெரிவித்திருந்தார். அதற்கேற்ப, வடகொரியா மற்றும் தென்கொரியா அதிபர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மே மாதம், கிம் ஜோங் வுன் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு இதுவரை உறுதிசெய்யப்படாவிட்டாலும், இதனை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் ட்ரம்ப். அதற்கு முன்னதாக, வரும் ஏப்ரல் மாதம் ஜப்பான் அதிபர் ஷின்சே அபேவைச் சந்திக்கவுள்ளார் அமெரிக்க அதிபர்.

வடகொரியா, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா சார்ந்த சந்திப்புகள் நிகழ்வதற்கு முன்பாக, கடந்த 25ஆம் தேதியன்று பீஜிங் நகருக்கு கிம் ஜோங் வுன்னை வரவழைத்துப் பேசியுள்ளார் சீனா அதிபர் ஜீ ஜின்பிங். கிம் ரகசியமாக சீனாவுக்கு வந்தார் என்று தகவல்கள் வெளியானநிலையில், அவரது பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சீனா. அதோடு, சீனாவின் அழைப்பின் பேரிலேயே கிம் இந்த பயணத்தை மேற்கொண்டார் என்றும் தெரிவித்துள்ளது. இந்தப்பயணத்திற்காக வடகொரியா அதிபர் கிம் ரயிலையே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon