மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

சிறப்புக் கட்டுரை: பஞ்சாபில் போதைக் கலாசாரம்!

சிறப்புக் கட்டுரை: பஞ்சாபில் போதைக் கலாசாரம்!

முத்துப்பாண்டி யோகானந்த்

இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாட்டில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகச் சமீபத்தில் அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை வெளியானது. இந்தியாவில் போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் பஞ்சாப் மாநிலத்தில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 33 வழக்குகள் பதிவாகிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.

இப்படித் தவறான காரணத்துக்காகச் செய்தியில் அடிபடும் பஞ்சாப் மாநிலம் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்களில் ஒன்று என்று சொல்லலாம். இயற்கை வளம்மிக்க இந்த பூமி, தொழில் வளர்ச்சியிலும் வேளாண் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. பண்பாட்டு ரீதியாகவும் வளமான பஞ்சாப், இன்று போதைப் பொருள் பழக்கத்துக்காகச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

இந்தியாவின் பரப்பளவில் வெறும் 1.4 சதவிகிதம் உள்ள பஞ்சாப் இந்தியாவின் தானியத் தேவையில் 12 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்வதால் இதற்கு உணவுக் களஞ்சியம் என்ற பெயர் வந்தது. 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இங்கு 39 சதவிகிதம் பேர் விவசாயிகள்.

2004ஆம் ஆண்டு இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப், அடுத்த 13 ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் மிகப்பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி தற்போது பஞ்சாப், இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் 15ஆவது இடத்தில் உள்ளது.

விவசாயம், இயந்திர பாகங்கள் தயாரிப்பு, ஆடை உற்பத்தி என பலதரப்பட்ட தொழில்களைக்கொண்டுள்ளது பஞ்சாப். இந்தியாவின் மொத்தப் பருத்தித் தேவையில் 25 சதவிகிதம் தரமான பருத்தி இங்கிருந்துதான் பெறப்படுகிறது. சைக்கிள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இம்மாநிலம், சைக்கிள்களை 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது.

இப்படிப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பஞ்சாப் மாநிலம் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதிலும் முன்னிலையில் இருக்கிறது. 2016ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் தடுப்பு சட்டத்தின் (NDPS Act) கீழ் 2016ஆம் ஆண்டு பதிவான 28,152 வழக்குகளில் 5,863 வழக்குகள் பஞ்சாபில் பதிவானது. இதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு பஞ்சாபில் 12,196 வழக்குகளில் 13,842 பேர் கைதாகியுள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 2,283 வழக்குகள் பதிவாகி 2,573 பேர் கைதாகியுள்ளனர். இதில் 12 காவல் துறையினரும் அடங்குவர்.

எப்படி வந்தது இந்தப் பழக்கம்?

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழும் பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கலாசாரம் எப்படித் தொடங்கியது?

இந்தியாவில் போதைப் பொருள் கலாசாரத்துக்கு முக்கியக் காரணம் பாகிஸ்தான் என்ற பரவலான கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில்தான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோர் எண்ணிக்கை உச்ச நிலையை அடைந்துள்ளது. எனவே, பாகிஸ்தானைக் குற்றம்சொல்லி எந்தப் பயனும் இல்லை.

16ஆம் நூற்றாண்டுகளில் போர்களின்போது சீக்கியர்கள் ஒப்பியம் என்னும் ஒருவகை போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஒப்பியம் என்னும் ஒருவகை தாவரங்களிலிருந்து பாலை எடுத்த பின் மீதமுள்ள சக்கையே இந்த ஒப்பியம். இது அசுர பலத்தைக் கொடுக்கக்கூடியது. எனவே, இதை வீரர்களுக்கு மட்டுமல்லாமல் யானைகளுக்கும் குதிரைகளுக்கும் கொடுத்து வந்துள்ளனர்.

1980ஆம் ஆண்டு காலகட்டத்தில் பஞ்சாப் மக்கள்தொகையில் மூன்றில் ஒருவருக்கு ஒப்பியம் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இதற்காக அவர்கள் தினமும் ரூ.30 முதல் 40 வரை செலவு செய்துவந்துள்ளனர். ஒப்பியம் தாவரம் பஞ்சாப் மாநிலத்தில் சிறு அளவில் பயிரிடப்பட்டது. அண்டை மாநிலமான ராஜஸ்தானிலிருந்தும் ஒப்பியம் பஞ்சாப்புக்குப் பெருமளவில் கொண்டுவரப்பட்டது. அப்போது போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக 1985ஆம் ஆண்டு போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் தடுப்பு சட்டம் (NDPS Act) இயற்றப்பட்டது. இதனால் ராஜஸ்தானிலிருந்து பஞ்சாப்புக்கு வரும் ஒப்பியம் முற்றிலும் தடை செய்யப்பட்டது.

இதையடுத்து, போதைப் பொருள் சந்தையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, சந்தையில் போதை மாத்திரைகளும், ஹெராயின் பவுடர்களும் களமிறக்கப்பட்டன. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஒப்பியம் ஒருவரை அடிமையாக்காது. ஆனால், அதைவிட மூன்று மடங்கு வீரிய சக்தி கொண்ட போதை மாத்திரைகளும், ஹெராயின் பவுடர்களும் இதற்கு நேர் எதிரானவை. அதுவரை பயன்பாட்டில் இருந்த ஒப்பியத்தைத் திடீரென தடை செய்தது, அதைவிடத் தீங்கு விளைவிக்கும் போதைப் பொருள்களை நோக்கி மக்கள் செல்லக் காரணமாக அமைந்தது.

பஞ்சாபில் போதைப் பழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் உள்ள மேலும் சில காரணங்கள்:

அதிக வேலைபளு

ராணுவம், லாரி ஓட்டுநர்கள், தொழில்முனைவோர் என அதிக மனஅழுத்தம் நிறைந்த தொழில் செய்யும் பஞ்சாபிய மக்கள் தங்கள் கவலைகளை மறக்கப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகத் தொடங்குகின்றனர். நம்நாடு பொருளாதார அளவில் நல்ல முன்னேற்றம் அடைந்தாலும் இது போன்ற பழக்கத்தினால் அடிமையானவர்களைச் சீர்திருத்த மறுவாழ்வு மையங்கள் திறக்கப்படவில்லை.

பொருளாதார வீழ்ச்சி

பசுமைப் புரட்சியில் பஞ்சாப் முன்னிலையில் இருந்த 1970-80ஆம் ஆண்டு காலகட்டம் அது. விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தியதன் விளைவாகத் தொழில் துறை மற்றும் சேவைத் துறையில் புரட்சி செய்யத் தவறினர். 1991ஆம் ஆண்டு தொழில் துறையில் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றம் பஞ்சாப்புக்குப் பெரிதாக எந்த மாற்றத்தையும் தந்துவிடவில்லை. அதைத் தொடர்ந்து நிலத்தடி நீரும் குறைந்துபோக, விவசாயத் தொழிலாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இது விவசாயிகள் போதையை நோக்கிச் செல்ல காரணமாக அமைந்தது.

காலிஸ்தான் இயக்கம்

1970-90களில் இந்தியாவில் இருந்த தீவிரவாத அமைப்புகளுக்குப் பணம் தேவைப்பட்டது. இதனால் நாடு முழுவதும் போதை மருந்துகளை அனுப்பத் தொடங்கினர். அப்போது இந்தியாவில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் குடும்பங்களை இழந்து, தங்களுக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்த மக்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகத் தொடங்குகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்துக்குப் பெருவாரியான வருவாய் மதுபான விற்பனை மூலமே கிடைக்கிறது. இதனால் தமிழகத்தைப் போலவே பஞ்சாப் மாநிலமும் மதுபானத்தை அரசுடைமை ஆக்கி விற்பனை செய்துவருகிறது. நாளடைவில் மது பழக்கம் முற்றி மக்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதுகுறித்து சென்னை மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனரும், மருத்துவ உளவியல் நிபுணருமான டாக்டர் சுனில்குமாரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 50 சதவிகிதம் பேர் போதைப் பொருள்களைச் சுவைப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது என்று தெரிவித்தார். போதைக்கு அடிமையாதலைப் பற்றி மேலும் பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?

போதைக்கு அடிமையாதலை மரபணு, உடல், மனம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். சிறு வயதிலிருந்து நாம் பார்ப்பவை அனைத்தும் நம் மனதுக்குள் ஒரு கற்றலை உருவாக்கும். அப்படித்தான் வீட்டில் அப்பாக்கள் சிகரெட், மது உள்ளிட்டவற்றைச் சுவைப்பதைப் பார்க்கும் பிள்ளைகள் அதற்கு எளிதில் அடிமையாகின்றனர்.

அன்றாட வாழ்க்கைச் சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகும் ஒரு தனி மனிதன், தன் நிஜ வாழ்வில் இருந்து தப்பிக்கவே போதையைத் தேடிச் செல்கின்றான். இன்றைய சூழலில் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனி குடும்பங்களாக மாறிவிட்டதால் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குப் போதுமான கண்காணிப்போ, அரவணைப்போ, வழிகாட்டுதலோ கிடைப்பதில்லை. இதுவே அடுத்த கட்டச் சிக்கலுக்கு வழி வகுக்கிறது.

இது தனி மனிதப் பிரச்சினை மட்டுமல்ல. ஒரு நாட்டின் பொருளாதார பிரச்சினையும்கூட. அதைப் பயன்படுத்துவோரின் திறன் குறைவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். கலாசார ரீதியில் மதுவுக்கு முன்பு இருந்த ஒரு தீய சாயல் தற்போது மாற்றப்பட்டு விட்டது.

பெரும்பாலான மருத்துவர்கள் குடியினால் பாதிப்படைந்த கல்லீரலுக்கு வைத்தியம் செய்வார்களே தவிர குடிப்பழக்கத்துக்கு வைத்தியம் பார்க்க மாட்டார்கள். காரணம், இதைக் குணப்படுத்த முடியும் என்று பலருக்குத் தெரியாது. இதற்கு வைத்தியம் மனநல மருத்துவர்களிடம் உள்ளது என்ற அறியாமை மக்களிடத்தில் உள்ளது. இந்த பழக்கத்திலிருந்து வெளியேறுவதற்கு வருமுன் காப்போம் மிக முக்கியம்.

இந்தப் பழக்கத்துக்கு அடிமையாதலைத் தடுக்கும் கடமை இருவரிடத்தில் உள்ளது. முதல் கடமை ஆசிரியர்களுடையது. பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதலே இதற்கான ஒரு விழிப்புணர்வைக் குழந்தைகளிடத்தில் ஆசிரியர்கள் புகுத்த வேண்டும். பள்ளிப் பாடங்களுடன் சேர்த்து வாழ்க்கையை வாழ்வதற்கு உலக சுகாதார நிலையம் வகுத்துள்ள 10 கோட்பாடுகளைப் பள்ளிகளில் கற்பிக்க ஆரம்பித்தால் இந்தப் பிரச்சினைக்கு ஓரளவுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

மற்றொரு கடமை மருத்துவர்களுடையது. அவர்கள் இதைத் தொடக்க காலத்திலேயே கண்டறிந்து, முறையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கினால் இது பாதி குணமடைந்துவிடும். அப்படி அவர்களையும் மீறி பழக்கம் முற்றியவர்கள் எங்களைப் போன்ற மனநல நிபுணர்களை நாடி வருவர். அவர்களுக்கு இங்கு முறையான சிகிச்சை அளித்து மீட்கப்படுவார்கள் என்று சுனில்குமார் தெரிவிக்கிறார்.

தனி மனிதர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கே இத்தனை மெனக்கெட வேண்டுமென்றால் ஒரு மாநிலத்தை?

பஞ்சாபில் போதைப் பொருள் பழக்கம் குறித்த தகவல்களுக்கான ஆதாரங்கள்:

https://www.thequint.com/news/india/why-does-punjab-have-a-drug-problem-the-untold-story

http://www.newindianexpress.com/nation/2018/mar/19/high-drug-smuggling-in-2016-earn-punjab-dubious-distinction-1789204.html

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018