மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

செவிலியர் தற்கொலை: மருத்துவர் உட்பட இருவர் கைது!

செவிலியர் தற்கொலை: மருத்துவர் உட்பட இருவர் கைது!

புதுக்கோட்டை அருகே தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். செவிலியரின் தற்கொலைக்குக் காரணமான மருத்துவர் உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையான விஜய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் முத்து (வயது 65) மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தத் தனியார் மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். இங்கு முத்துக்குடாவைச் சேர்ந்த 24 வயதான தாயம்மாள் என்பவர் மூன்றாண்டுகளாகச் செவிலியராகப் பணிபுரிந்துள்ளார்.

இம்மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் மணிகண்டன் என்பவரும் தாயாம்மாளும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இதை கண்ட மருத்துவர் முத்து மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் முன்பு தாயம்மாளைக் கண்டித்துத் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த செவிலியர் தாயம்மாள் மார்ச் 28 அதிகாலையில் மருத்துவமனையில் உள்ள ஓர் அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவிலியரின் பெற்றோருக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த காவல் துறையினர் தாயம்மாளின் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வந்த செவிலியரின் உறவினர்கள் தாயம்மாளின் சாவில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்கள். மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் செவிலியரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து, தாயம்மாளைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மருத்துவர் முத்து உட்பட இருவரைக் காவல் துறையினர் நேற்று கைது செய்து, மாஜிஸ்திரேட் கலையரசி ரீட்டா முன் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon