மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

ரஜினி விழா: விசாரித்த ஓபிஎஸ்

ரஜினி விழா: விசாரித்த ஓபிஎஸ்

ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக அறிவிக்கப்பட்ட பிறகு தேனி மாவட்டம் கம்பத்தில் முதன்முறையாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து அதற்காகத் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்தார். தற்போது கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் ரஜினி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசியும் வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தேனி மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் கம்பத்தில் நடைபெற்றது. விழாவில் நிர்வாகிகளும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இயக்குநரும் நடிகருமான ஈ.ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் 150 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் முதன்முறையாக ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் விழா நடந்துள்ளது. இதனால் விழாவுக்குக் கூடிய கூட்டம், மக்களிடையேயான வரவேற்பு குறித்து கம்பம் அதிமுக நிர்வாகிகளிடம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் விசாரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய காந்திய மக்கள் இயக்கத்தில் தலைவர் தமிழருவி மணியன், “ரஜினியை முதல்வர் என்று அழையுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இப்பகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கட்டப்பட்ட பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவையும் திறந்து வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon