மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

முடிவுக்கு வந்த ஹசாரே போராட்டம்!

முடிவுக்கு வந்த ஹசாரே போராட்டம்!

மத்தியில் லோக்பாலையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தாவையும் உடனடியாகக் கொண்டுவர வலியுறுத்தி கடந்த 23ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, நேற்று (மார்ச் 29) அதை நிறைவு செய்தார். மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய இணையமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மத்திய அரசின் சார்பாக உறுதியளித்தனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்ததன் மூலமாக, இந்தியா முழுவதும் தெரிந்த முகமானார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் ஜன் லோக்பால் அமைப்பைக் கொண்டுவர வேண்டுமென்று அவர் குரல் கொடுத்தார். இந்த உண்ணாவிரதத்தில் பெருந்திரளாக இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஐந்து நாள்கள் வரை இந்தப் போராட்டம் நீடித்தது.

தற்போதைய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ், சமூக ஆர்வலர் மேதா பட்கர் உட்பட பலர் இதில் கலந்துகொண்டு, ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தப் போராட்டமானது, பல துறைகளைச் சார்ந்த இந்திய பிரபலங்களின் கவனத்தையும் கவர்ந்தது. இதற்குக் கிடைத்த மிகப்பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ஜன் லோக்பால் அமைப்பு விரைவில் கொண்டுவரப்படும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், அதை உருவாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லோக்பால் அமைப்பை உருவாக்குவோம்’ என்று 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்தது பாஜக. அதன்பின் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து நான்காண்டுகள் ஆகியும், இதுவரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு லோக்பால் பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதியன்று மீண்டும் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் அன்னா ஹசாரே. லோக்பால், லோக் ஆயுக்தா மற்றும் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் மத்திய அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்து, அவர் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். ஒரு வாரம் நடந்த இந்தப் போராட்டத்தில் ஹசாரேவின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். தேர்தல் சீர்திருத்தங்கள், விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (மார்ச் 29) உண்ணாவிரதப் பந்தலில் ஹசாரேவைச் சந்தித்தனர் மத்திய வேளாண் துறை இணையமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ். ஹசாரேவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து, அவர் பழச்சாறு அருந்தி தன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அறிவித்தார். வரும் ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளிப்பதாகவும், அப்போதும் லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பரில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவதாகவும் ஹசாரே தெரிவித்தார்.

“குறிப்பிட்ட காலத்துக்குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றிச் சொன்னபோது, அதற்குள்ளாகவே அனைத்தையும் அரசு நிறைவேற்றும் என உறுதியளித்தார் முதலமைச்சர் பட்னாவிஸ். அரசுக்கும் மக்களுக்கும் இடையே பிரிவில்லை. இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எது நல்லதோ, அதையே அரசு செயல்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, உண்ணாவிரதப் பந்தலை நோக்கி செருப்பு வீசியவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர் யாரை நோக்கி செருப்பு வீசினார் என்று கண்டறிய முடியவில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால், ஹசாரேவின் எடை 5 கிலோ குறைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon