மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

சிறப்புக் கட்டுரை: கலையால் என்ன செய்ய முடியும்?

சிறப்புக் கட்டுரை: கலையால் என்ன செய்ய முடியும்?

மதரா

சென்னை கலைக் கண்காட்சியில் கலைஞர்களின் அனுபவங்களும் வெளிப்பாடுகளும்

சென்னை கலைக் கண்காட்சி நடைபெறும் ஸ்பேஸஸ் கலை மையத்தின் தாழ்வாரத்தில் நுழையும்போது வலது ஓரத்தில் செங்கற்கள் கொண்டு அடுக்கப்பட்ட சிறிய மேடை ஒன்றில் பெரிய அளவில் புத்தகம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. உடனடியாகக் கவனத்தை ஈர்க்கும் அதைத் திறந்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்க்கும்போது செங்கல் சூளையில் செங்கல்லோடு சேர்ந்து வேகும் மனிதர்களின் வாழ்க்கை கண் முன் விரிகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காமேஸ்வரன் சிறு வயதிலிருந்தே கொல்லி மலை அடிவாரத்தில் இயங்கும் பல செங்கல் சூளைகளைப் பார்த்தபடியே வளர்ந்துள்ளார். அந்த அனுபவங்கள் தூண்ட அதையே தனது களமாக எடுத்துக்கொண்டு அம்மக்களோடு சில நாள்கள் பயணித்து இந்தப் படைப்பை உருவாக்கியுள்ளார்.

செங்கல் செய்ய பயன்படுத்தும் மண்ணையும் அதில் ஈடுபடும் தொழிலாளர்களின் கைரேகைப் பதிவிலிருந்தும் ஆரம்பித்து அதன் பல்வேறு கட்டப் பணிகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. புகைப்படங்கள் மூலமும் விளக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் போர்ட்ரைட் மற்றும் இது குறித்த படைப்பாளியின் எண்ணங்கள் எழுத்துகளாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இறுதியாக அந்தப் புத்தகத்தின் உள்ளே ஒரு செங்கல்லை உருவாக்கி நிறைவுசெய்துள்ளார் காமேஷ்.

“என் சிறு வயது நண்பன் ஒருவனின் குடும்பம் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தது. அவனைத் தொடர்புகொண்டால் தகவல் பெறலாம் என எண்ணித்தான் சென்றேன். ஆனால், அவர்களது குடும்பம் இடம்மாறிச் சென்றுவிட்டது. அவர்களை விசாரித்துவிட்டு நான் வந்த வேலை குறித்து விளக்கினேன். அதன்பின் சில நாள்கள் அவர்களோடு நானும் பயணித்தேன்” என காமேஷ் தனது கள ஆய்வில் கண்ட பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

“சேம்பரில் வேலை பார்க்கும் மக்கள் அங்கேயே ஒரு குடிசை அமைத்துத் தங்கிவிடுகின்றனர். பகல், இரவு, வெயில், மழை, காற்று என அத்தனை பொழுதுகளும் மண்ணுடனே அவர்கள் வாழ்க்கை நகர்கிறது. இவர்கள் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லர். விழுப்புரம் அருகில் உள்ள வறட்சியான கிராமத்தில் இருந்து குறைந்த ஊதியத்துக்காகக் குடும்பத்தினரோடு வந்து தங்கவைக்கப்படுகிறார்கள். கொத்தடிமை வழக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சொன்னாலும் இன்னும் இதுபோன்ற சேம்பர்களில் இருக்கத்தான்செய்கிறது. மிகைப்படுத்திச் சொல்லவில்லை. மணல் செங்கல்லாக மாற இவர்கள் உயிரைக் கொடுக்கின்றனர். ஆனால், இவர்களுக்குக் கிடைப்பதோ ஒரு செங்கல்லுக்கு ஐம்பது பைசாதான். எனவே அதிகமான செங்கற்களை உருவாக்கினால் தான் கணிசமான பணம் கிடைக்கும் என்பதால் இரவு பகலாக வேலையைத் தொடர்கிறார்கள். பகலில் மணலைத் தேர்ந்தெடுத்து அதைப் பக்குவம் பார்க்கின்றனர். இரவு 1 மணியில் இருந்து காலை 7 மணி வரை செங்கல்லை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். பண நெருக்கடி காரணமாகக் கடனாகப் பணத்தை வாங்கிவிட்டுக் குறைந்த கூலிக்குக் குடும்பமே வருடக்கணக்கில் வேலை பார்க்கின்றனர். பக்கத்தில் உள்ள காவல் துறை அதிகாரியின் சேம்பரில் வேலை விரைவாக நடக்கவில்லை என்றால் தொழிலாளர்களுக்கு அடி விழுமாம். நாம் எந்தக் காலகட்டத்தில் இருக்கிறோம் என்ற சந்தேகம் எனக்குள் வந்தது. இது கொத்தடிமைத்தனம் அல்லாமல் வேறென்ன? செங்கல்லைச் சுடுவது சற்று ஆபத்தான வேலை. சரியாக அடுக்காமல் விட்டு செங்கல் சரிந்தால் தீக்குள் விழ நேரிடும். இந்தக் கொடுமைகள்தான் என்னை இதைக் கவனப்படுத்த தூண்டின” என்று காமேஷ் கூறி முடித்தார்.

காமேஷின் படைப்பு மட்டுமல்லாமல் அரங்கில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் படைப்புகளும் தொழிலாளர்களின் கடின உழைப்பை, சந்திக்கும் பிரச்சினைகளை அனுபவிக்கும் கொடுமைகளின் கலை வெளிப்பாடுகள்தான். இந்தப் படைப்புகள் மூலமாக அந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன, அவர்களின் வலிகள் குறைய ஏதேனும் வழி பிறக்குமா, அவர்கள் படும் கஷ்டங்கள் எல்லாம் கலைக்கான கருப்பொருள்கள் மட்டும்தானா எனச் சில கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. இதை காமேஷிடமே கேட்டோம்.

அதற்கு அவர், “இந்தக் கேள்வி எனக்குள்ளும் இருக்கிறது. நாங்கள் இந்த அனுபவங்களை ஓவியமாகவோ, சிற்பமாகவோ உருவாக்குகிறோம். அதைக் காட்சிக்கு வைக்கிறோம். நிறைய பேர் பார்த்துவிட்டு வொர்க் நல்லா இருக்கு எனப் பாராட்டுகிறார்கள். இதனால் அந்தத் தொழிலாளர்கள் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றம் வந்துவிடும் என்பது எனக்குத் தெரியாது. இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய் அவர்களிடம் காட்ட வேண்டும். கட்டாயம் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அந்த சந்தோஷத்தைப் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த பின் சாலையோரம் கிடக்கும் ஏதேனும் ஒரு செங்கல்லை சாதாரணமாகக் கடந்துபோய்விடமுடியாது. ஒரு செங்கல் உருவாக எவ்வளவு உழைப்பு தேவை, அதன் பின் உள்ள பல குடும்பங்களின் வலி என்ன என்பது அவர்கள் கண் முன் வரும். அதை இந்தப் படைப்பு ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என்று விளக்கம் அளித்தார்.

இது தவிர மெட்ரோ ரயில் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குறித்தும் காமேஷ் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். ரயில் தண்டவாளங்களில் முகம் தெரியாத எண்ணற்ற நபர்கள் வேலை செய்து கொண்டிருப்பது போன்ற ஓவியத்தை சார்கோலால் வரைந்துள்ளார். நடுவில் பழைய கடிகாரம் ஒன்று உள்ளது. எண்கள் இல்லாத அந்தக் கடிகாரத்தில் முட்கள் மட்டும் சரியாக நகர்ந்துகொண்டிருக்கின்றன. காமேஷிடம் இந்த ஓவியம் குறித்தும் கடிகாரம் அங்கு பொருத்தப்பட்டுள்ள காரணம் குறித்தும் கேட்டோம்.

“ஆப்பிரிக்க - அமெரிக்க ஓவியரான காரா வாக்கரின் ஓவியங்களில் இருந்து ஊக்கம் பெற்று இந்த ஓவியத்தை வரைந்தேன். எனது எண்ணவோட்டங்கள் அவரது படைப்புகளோடு ஒத்துப்போவதாக உணர்கிறேன். சென்னை வந்ததிலிருந்தே மெட்ரோ தொழிலாளர்களைத் தொலைவிலிருந்து கவனித்துவருகிறேன். இரவு, பகல் எனத் தொடர்ந்து வேலை நடந்துகொண்டிருக்கிறது. எனவே, காலம் காட்டும் எண்கள் எதற்காக என்று அதை நீக்கிவிட்டு உபயோகித்தேன். உள்ளே இருக்கும் இயந்திரம் தெரியும் விதத்தில் அமைத்துள்ளேன்” என்று விளக்கினார்.

மெட்ரோ தொழிலாளர்கள் என்ன சொன்னார்கள் எனக் கேட்டபோது, “செங்கல் சூளையில் தொழிலாளர்களோடு பழகி அவர்கள் அனுபவங்களைக் கேட்டறிந்ததுபோல் இங்கு செய்யவில்லை. முதல் காரணம், இவர்கள் அனைவரும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தி தெரியாததால் அது அமையவில்லை. ஆனால், அவர்களைத் தொடர்ந்து தொலைவில் இருந்து கவனித்துவருகிறேன்” என்று கூறினார்.

தனியாக அமைத்த இந்த இரு படைப்புகளைத் தவிர காமேஷ் மாணவர்களோடு இணைந்து ஓவியங்களும் வரைந்துள்ளார். ராய் சௌத்ரி உருவாக்கியது போன்ற உழைப்பாளர்கள் சிலையை இப்போது நீங்கள் உருவாக்கினால் என்ன சிலையை உருவாக்குவீர்கள் என்பதுதான் இந்த ஓவியங்களுக்கான தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மார்டன் டைம்ஸ் படத்தில் மிஷினுக்குள் மாட்டிக்கொள்ளும் சார்லி சாப்ளினையும் வண்டி இழுக்கும் மாட்டையும் சிலையாகச் செய்வேன் என்று முடிவுசெய்த காமேஷ், அதையே ஓவியங்களாக வரைந்துள்ளார்.

கண்காட்சியில் பங்கேற்றுள்ள பெரும்பாலானோர் தமிழகத்தில் ஏதோ ஒரு முகம் தெரியாத கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான் என்பது அவர்களோடு கலந்துரையாடும்போது தெரிந்தது. பெயின்டிங் துறையில் இளங்கலை படிப்பை நிறைவு செய்துள்ள காமேஸ்வரன், நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர். வாழைப்பழங்களைத் தெருக்களில் விற்று இவரது அம்மா சம்பாதிக்கும் பணம்தான் குடும்பத்தின் மொத்த வருமானம். கலை மீதான ஒரே ஆர்வம்தான் காமேஷ் போன்றோரை பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி முன்னேறச் செல்லும் ஊக்கச் சக்தியாக இருக்கிறது.

சென்னை கலைக் கண்காட்சி தொழிலாளர்களின் உழைப்பைக் காட்சிப்படுத்தி, பார்வையாளர்களை கலை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஈர்த்துள்ளதற்கு மாணவக் கலைஞர்களின் இந்தப் பின்னணியும் முக்கியக் காரணம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

(பிற மாணவர்களின் படைப்புகள், அனுபவங்கள் நாளை காலை 7 மணி பதிப்பில்)

உழைப்பைப் பேசும் கலைக் கண்காட்சி!

சென்னை கலைக் கண்காட்சி: யாருக்குச் சிலை வைப்பது?

அம்மாவும் தொழிலாளிதான்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

5 நிமிட வாசிப்பு

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடல்!

3 நிமிட வாசிப்பு

பிரசித்தி பெற்ற கோயில்கள்  மூடல்!

வெள்ளி 30 மா 2018