மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

வங்கிக் கடன்: பாஸ்போர்ட் கட்டாயம்!

வங்கிக் கடன்: பாஸ்போர்ட் கட்டாயம்!

ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெறுபவர்களிடம் கட்டாயம் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை வாங்கும்படி பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான சிவ் பிரதாப் சுக்லா எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “ரூ.50 கோடி அல்லது அதற்கு மேல் கடன் பெறும் நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களின் சான்று நகலை வங்கிகள் கட்டாயமாக்க வேண்டும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவைப்படும்போது அந்த விவரங்களை வங்கிகளால் வழங்க இயலும். ஏற்கெனவே கடன் பெற்றுள்ளவர்களிடமும் இந்த விவரங்களை வங்கிகள் பெற வேண்டும். அவ்வாறு கடன் பெறும் நபரிடம் பாஸ்போர்ட் இல்லையென்றால் அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லை என்பதை உறுதி செய்யும் சான்றுகளைக் கட்டாயம் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் மல்லையா முதல் நீரவ் மோடி வரையில் பல்வேறு கடனாளிகள் கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டே பறந்து சென்றுள்ளனர். அவர்களின் கடன் மோசடி கண்டறியப்பட்டு அவர்களை வருமான வரித் துறை நெருங்கும் முன்னரே அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பி விடுகின்றனர். இந்த நிலையில் அரசின் தற்போதைய நடவடிக்கை மூலமாக அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்குவது எளிதாகும். வங்கி மேம்பாட்டுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த சிவ் பிரதாப் சுக்லா, 2017-18 நிதியாண்டில் வங்கிகளின் மறு மூலதனத்துக்காக மத்திய அரசு ரூ.51,858 கோடியை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon