மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

2017-18 சந்தைப் பருவத்தின் முடிவுக்குள் 2 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

மார்ச் 28ஆம் தேதி மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றில் சர்க்கரை ஏற்றுமதிக்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் நிறைவுறும் நடப்பு சந்தைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகள் மொத்தம் 2 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும், 2021 செப்டம்பர் வரையில் இவ்வாலைகள் வரியில்லாமல் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அளவுக்கு அதிகமான இருப்பு தேங்குவதைத் தடுக்க முடியும் என்பதோடு, சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கப் போதுமான நிதியாதாரம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 21ஆம் தேதி வரையில் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.13,899 கோடியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய சர்க்கரை நுகர்வோராக உள்ள இந்தியா, உள்நாட்டில் அதிக உற்பத்தி காரணமாக சிக்கலில் உள்ளது. நடப்பு 2017-18 சந்தைப் பருவத்தில் இந்தியா மொத்தம் 29.5 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை உற்பத்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் உற்பத்தியை விட 45 சதவிகிதம் அதிகமாகும். அதிக உற்பத்தி எதிர்பார்ப்பால் அதிக இருப்பு தேங்காமல் இருக்க இந்த ஏற்றுமதித் திட்டத்தை அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் சர்க்கரை விலை மிகவும் குறைவாக இருப்பதால் இத்திட்டத்தால் இழப்புதான் ஏற்படும் என்று சர்க்கரை ஆலையினர் கருதுகின்றனர்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon