மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

கூட்டுறவு சங்கத் தேர்தல்: எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அரசு ஊழியர்கள்!

கூட்டுறவு சங்கத் தேர்தல்: எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அரசு  ஊழியர்கள்!

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக, குமரி மாவட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் சேர்ந்து, தேர்தல் அதிகாரியான அரசு அலுவலரை முற்றுகையிட்டனர். இதற்குப் பதிலடியாக, எம்.எல்.ஏக்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குமரியில் ஆரம்பித்துள்ள இந்தப் பொறி, தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் தேர்தல் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் சிறப்புத் தேர்தல் அலுவலராக ஜே.ஆர். ஆக இருக்கும் நடுகாட்டு ராஜா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மார்ச் 28ஆம் தேதி காலை 11 மணியளவில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் நடுகாட்டு ராஜாவின் அலுவலகத்துக்குக் குமரி மாவட்டத்திலுள்ள ஆறு தொகுதி எம்.எல்.ஏக்கள், பாஜக பிரமுகர் எம்.ஆர்.காந்தி மற்றும் பலர் என்று அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சியினரும் கோபமாகச் சென்றுள்ளனர்.

அப்போது நடுகாட்டு ராஜா தன் இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் தனக்கே உரிய கோபத்தில், ‘இத்தனை எம்.எல்.ஏக்கள் வந்திருக்கோம்... மரியாதை இல்லாமல் உக்காந்திருக்கியே, எந்திரிலே..’ என்று சத்தம்போட நடுக்காட்டு ராஜா, “நிறைய பேரு வந்திருக்கீங்க. யார் எம்.எல்.ஏனு தெரியலை” என்று பதில் சொல்லியிருக்கிறார். இதனால் மேலும் கோபமானது எம்.எல்.ஏக்கள் தரப்பு.

அனைத்துக் கட்சியினரும் திரண்டு சென்றதன் காரணம் ஒன்றே ஒன்றுதான்.

“பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் பச்சைமாலின் தனி உதவியாளராக இருந்த சகாயம். அவர், விஜயகுமார் அதிமுக மாசெ ஆனபிறகு மீண்டும் கட்சியில் சேர்ந்து இப்போது கன்னியாகுமரி மாவட்டக் கூட்டுறவு வங்கித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அதிகாரி நடுகாட்டு ராஜா செயல்பட்டு வருகிறார் என்பதுதான் புகார். சகாயத்துக்கு அந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்திலுள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.

உதாரணமாக, புத்தேரி ஊராட்சிக்குட்டபட்ட Y-67 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 26-03-2018 அன்று காலை சுமார் 46 பேர் மனுத் தாக்கல் செய்தனர் .இதில் 10 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டு மற்ற அனைவரின் மனுக்களும் தள்ளுபடி செய்ததாக அன்று மாலை தெரிவிக்காமல் இரவு நேரத்தில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்கள். இச்செய்தி அறிந்ததும் மனு நிராகரிக்கப்பட்ட 36 நபர்களும் சேர்ந்து நடுகாட்டு ராஜாவிடம், மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டனர். அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. இதுபோன்று பல ஊராட்சிப் பகுதிகளிலும் இதே நிலைமை தொடர்ந்துள்ளது. இதை அறிந்த அனைவரும் ஒன்றிணைந்து தட்டி கேட்டோம்” என்கிறார்கள் எம்.எல்.ஏக்கள் தரப்பினர்.

மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்துக் கூட்டுறவு தேர்தலையும் ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. இதற்குப் பதிலேதும் சொல்லாத நடுக்காட்டு ராஜா மதியம் 2 மணியளவில் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்டார். ஆனால், நேராக நேசமணி காவல் நிலையத்துக்குச் சென்று பிரின்ஸ், சுரேஷ் ராஜன், மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் ஆகிய நான்கு எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மேலும் கண்டால் தெரியும் ஐந்து நபர்கள் என பத்து பேர் மீது அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து பணி செய்ய விடாமல் தடுத்தார்கள், மிரட்டினார்கள் என்று புகார் கொடுத்துவிட்டார். இது தெரியாமல் நெடுநேரம் காத்திருந்துவிட்டுக் கிளம்பினார்கள் எம்.எல்.ஏக்கள்.

இதற்கிடையில் நேற்று குமரி மாவட்ட அரசு அலுவலகங்களில் விடுமுறையிலும் கூடிய அரசு ஊழியர்கள், ‘நடுகாட்டு ராஜாவை மிரட்டிய எம்.எல்.ஏக்களை கைது செய்ய வேண்டும்’என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய குமரி காங்கிரஸ் பிரமுகர்கள், “அரசு ஊழியர்கள் முறையான காரணங்களுக்காகப் போராடினால் நல்லது. அதைவிட்டுவிட்டு நடுகாட்டு ராஜா போன்றவர்களுக்காக அவர்கள் ஆதரவு தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. கூட்டுறவுத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்படுகிறார்கள். அதற்காக அரசு அதிகாரிகளுக்கு என்னென்ன பரிசுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம். அதிகாரிகளின் வீடுகளை சோதனையிட்டால் அந்தப் பரிசுகள் என்னவென்று எல்லாருக்கும் தெரியும்” என்றனர்.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

5 நிமிட வாசிப்பு

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடல்!

3 நிமிட வாசிப்பு

பிரசித்தி பெற்ற கோயில்கள்  மூடல்!

வெள்ளி 30 மா 2018