மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகக் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத்தினால் இதுநாள்வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டுவந்த 192 டிஎம்சி நீரை 14.75 டிஎம்சி குறைத்து, 177.25 டிஎம்சியாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை ஆறு வாரங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன், தமிழிசை, கே.பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, ஜி.கே.மணி, ஜி.கே.வாசன், சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்களும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரைச் சந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதேபோல் கடந்த மார்ச் 9ஆம் தேதி டெல்லியில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா என நான்கு மாநில அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடகா அதிகாரிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தனர். இதனால், நான்கு மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக நான்கு மாநிலங்களும் தங்களது செயல் திட்டங்களை எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்யுமாறு மத்திய நீர்வளத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் தெரிவித்தார்.

மார்ச் 14ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதேபோல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 45 நாள்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 26ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவற்றை அமைக்க மத்திய அரசு தவறுபட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

தமிழக எம்.பிக்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதனால் பலமுறை அவை ஒத்தி வைக்கப்ப்ட்ட்து.

இந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நேற்றோடு (மார்ச் 29) முடிந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் போன்றோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்

இதில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, உச்ச நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை என்பதால் சனிக்கிழமை காலை, தமிழக அரசு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும், திங்கட்கிழமை அன்று, தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரத் தேவையான ஆவணங்களைத் தமிழக அரசின் வழக்குரைஞர் சேகர் நாப்தே தயாரித்து வருவதாகவும், பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் இன்று இரவு டெல்லிக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி தீர்ப்பு தொடர்பாகக் கேரளா சார்பில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon