மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

சிறப்புக் கட்டுரை: ஸ்டெர்லைட் ஆலை ஏன் அகற்றப்பட வேண்டும்?

சிறப்புக் கட்டுரை: ஸ்டெர்லைட் ஆலை ஏன் அகற்றப்பட வேண்டும்?

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலை குறித்த விவாதம் இப்போது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆலை தமிழகத்துக்கு வந்ததன் பின்னணியையும் அதன் விளைவுகள் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களையும் விரிவாகக் காண்போம்.

வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் குஜராத், கோவா, கேரள மாநிலங்களில் தாமிர உருக்காலை அமைக்க முயன்றார். ஆனால் மகாராஷ்டிர மாநிலம், ரத்தினகிரியில் 1989ஆம் ஆண்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த மண் சுவையான மாம்பழம் விளையும் மண். தாமிர உருக்காலை இங்கு வந்தால் தங்களின் விவசாயம் பாதிக்கும் என்று விவசாயிகள் போராடியதன் விளைவாக அப்போதைய அந்த மாநில முதல்வர் சரத் பவார் 01/05/1994இல் இந்த தாமிரத் தொழிற்சாலை அமைய தடைவிதித்தார்.

30/10/1994இல் இந்த ஆலை தூத்துக்குடியில் அமைய முயற்சி எடுக்கப்பட்டது. 18/03/1996இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல்லும் நாட்டினார்.

எதிர்ப்பின் வரலாறு

அப்போதே இதற்கான எதிர்ப்பு தொடங்கிவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டுவந்த எம்.வி.ரீசா என்ற கப்பலைத் தூத்துக்குடி மீனவர்கள் விரட்டியடித்தனர். நாட்டுப் படகுகள், விசைப் படகுகள் கொண்ட 500 மீனவர்கள் இந்த ரீசா கப்பலை விரட்டியடித்தனர். அந்தக் கப்பல் கொச்சிக்குச் சென்று அங்கிருந்து கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கடுத்து 10/04/1996இல் இரண்டு பெண்கள் உள்பட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் கடலில் கலக்காது எனத் தமிழக அரசின் சார்பில் 18/04/1996 அன்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு அந்தக் காலகட்டத்தில் தமிழ் மாந்தன் தலைமையில் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாடு 20/07/1996இல் மக்கள் பெரும் எதிர்ப்பு மாநாடாக நடந்தது. திரும்பவும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு எம்.பி. பரங்கவி கப்பலில் தாமிரத் தாதைக் கொண்டவந்தபோது மீனவர்கள் அதை எதிர்த்து அக்கப்பலை முற்றுகையிட்டனர். நவம்பர் 1996இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இதற்கு மத்தியில் 05/07/1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுவால் ஆலையில் இருந்த ரமேஷ் பிளவர் நிறுவனத்தில் இருந்த 165 பெண்கள் மயங்கி விழுந்தனர். அகில இந்திய ரேடியோவில் பணியாற்றிய 11 பேரும் நச்சு வாயுவால் மயங்கி விழுந்தனர். நீதிமன்றங்களில் வழக்காடியும் பயனில்லை.

இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, தேனி மாவட்டம், தேவாரம் - பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள மலையில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்ற உத்தரவும் வந்துள்ளது.

காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வு செய்யும் பொருட்டு அண்டவெளியில் சக்தி மிகுந்த கதிரலைகள் உருவாகும். அதை உருவாக்க 1000 டன் ஜெலட்டின் வெடி மருந்துகளை 800 நாள்களுக்கு வெடிக்கச் செய்து 11,25,000 டன் பாறைகளுடன் மலைகளும் தகர்க்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்துடன், கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. பூமியே சிதறுண்டுவிடும் போன்ற விளைவுகள் ஏற்படுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மண்வளம் காப்பதற்கான போராட்டம்

எங்கள் கரிசல் மண்பகுதியில் ராஜபாளையத்திலுள்ள தமிழ்நாடு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் வசதியில்லாமல், மக்களுக்குச் சுவாசநோய், புற்றுநோய் என 1970களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் விருதுநகர் பெ.சீனிவாசன் (காமராஜரைத் தோற்கடித்தவர்), அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த சிவகாசி வி.ஜெயலட்சுமி போன்றோர் போராடி எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு (வழக்கு எண். 10589/1986) நான் தாக்கல் செய்தேன். அதன்படி, உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்களும் கருவிகளும் பொருத்தப்பட்டன. அப்போதே ஆலையை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபோது 1986இல் என்னுடைய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததனால் ஆலையை விற்க முடியாமல் போனது.

மேலும், 2015ஆம் ஆண்டு (WP No. 4696 of 2015) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்பின்படி 80 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டு, தமிழக அரசு ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தியது.

கேரளாவின் மருத்துவக் கழிவுகள், குப்பைகளைத் தமிழக எல்லைப் பகுதிகளான நெல்லை மாவட்ட செங்கோட்டையில், குமரி மாவட்டத்தின் எல்லைகளில் லாரிகளில் கொண்டுவந்து கொட்டிச் செல்லும் பிரச்சினையைத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன்.

கேடு விளைவிக்கும் ஆலைகள்

பல ஆலைகள் தமிழகத்தின் பல வட்டாரங்களில் பல்வேறு கேடுகளை மக்களுக்கு விளைவிக்கின்றன.

அந்த ஆலைகள் வருமாறு:

- அரியலூர் சிமென்ட் தொழிற்சாலை,

- மதுரை பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை,

- தூத்துக்குடி சிப்காட்,

- கடலூர் சிப்காட்,

- திருப்பூர் பின்னலாடை - நொய்யலாற்றின் பாதிப்பு,

- சேலம் கஞ்சமலை தாது கம்பெனி,

- மேட்டூர் அனல்மின் நிலையங்கள்,

- மதுரை அபிலாஷ் கெமிக்கல்ஸ்,

- நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,

- கெயில் திட்டம்,

- திருவண்ணாமலை - ஜிண்டால் தாது கம்பெனி (இன்னும் தொடங்கவில்லை),

- ஊட்டி ஸ்டெர்லிங் ஆலை,

- கொடைக்கானல் பாதரச (மெர்குரி) தொழிற்சாலை,

- நாகார்ஜுனா ஆலை

இப்படி நீண்ட பட்டியல் உண்டு.

முடக்கமும் தொடக்கமும்

தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது மத்திய அரசு.

1959ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சேலத்தில் 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சேலம் இரும்பாலை தற்போது முடக்கப்படுகிறது.

ஊட்டியில் முக்கியமாக இயங்கிவந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடி நைனிட்டாலுக்கு மத்திய அரசு அனுப்பிவிட்டது. பல தமிழக திட்டங்கள் முடக்கப்பட்டன.

இப்படி, தமிழகத்துக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை முடக்கிவிட்டு, சுற்றுச்சூழல் விரோத திட்டங்களுக்குத் தாராளமாக அனுமதியை வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை.

இன்று பெரும் பிரச்சினையாக வெடித்துள்ள ஸ்டெர்லைட் ஆலை குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவருகின்றன. அவற்றின் பின்னணியை நாளை விரிவாகப் பார்க்கலாம்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இருபத்தைந்து ஆண்டுகளாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து களப்பணியாற்றியிருக்கிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018