மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

வாணவேடிக்கைக்குத் தயாராகும் ஹர்பஜன்

வாணவேடிக்கைக்குத் தயாராகும் ஹர்பஜன்

சென்னையில் இரண்டாண்டுகளாக தனக்கென ஓர் அணி இல்லாததுபோல் வெறுமையாக உணர்ந்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தின் எல்லையில் மிதக்கின்றனர். காரணம், சென்னை ரசிகர்களின் ஃபேவரைட் கூட்டணியான மகேந்திரசிங் தோனி, டிவைன் பிராவோ, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டூப்ளசிஸ், முரளி விஜய் அடங்கிய சென்னை அணி மீண்டும் உருவானதே. இந்த வெற்றிக் கூட்டணியில் புது வரவுகளாக தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹீர், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஆகியோர் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் சென்னை அணிக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ரசிகர்களின் இரண்டாண்டு ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் இம்முறை பூர்த்திசெய்யும் விதமாக வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இருப்பினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது சென்னை ரசிகர்களைக் குஷிப்படுத்தவும் அவர்கள் தவறுவதில்லை. பயிற்சிக்கு வரும் வழியிலும், பயிற்சியின் போதும் பல்வேறு நிகழ்வுகளைக் நிகழ்த்தி ரசிகர்களின் கைத்தட்டல்களையும் கரகோஷங்களையும் கொள்ளையடிக்கின்றனர்.

வீரர்கள் தினமும் அடையாறு கேட் நட்சத்திர ஹோட்டலில் இருந்து மாடி வசதியுடன் அமைக்கப்பட்ட பிரத்தியேகமான பேருந்தில் மைதானத்துக்குக் கிளம்புகின்றனர். டிடிகே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, வாலாஜா சாலை வழியாக உலாவரும் வீரர்கள் வரும் வழியில் உற்சாகமாக ரசிகர்களை நோக்கிக் கையசைத்தபடியும், நடனமாடியபடியும் களேபரமாக சேப்பாக்கம் மைதானத்துக்குள் நுழைகின்றனர்.

நேற்று வீரர்களின் வலைப்பயிற்சியைக் காண ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் சேப்பாக்கம் மைதானத்தை நோக்கிப் படையெடுத்தன. 4, 5 மற்றும் 6 ஆகிய அரங்கங்கள் ரசிகர்களுக்கு இலவசமாகத் திறந்து விடப்பட்டன. அங்கிருந்த கூட்டத்தைப் பார்க்கையில் இது வலைப்பயிற்சியா, இல்லை லீக் போட்டியா என்ற சந்தேகம் அனைவருக்குள்ளும் எழுந்தது. பயிற்சியின்போது சென்னை வீரர்கள் நாலா புறமும் பந்தைச் சிதறடித்து அங்கு கூடிய ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். கிட்டத்தட்ட எல்லா வீரர்களும் தங்களுக்கான பயிற்சிகளை முடித்துவிட்டு 8.30 மணியளவில் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

அதுவரை மைதானத்தில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்த ஹர்பஜன் சிங், எல்லோரும் சென்ற பிறகு பேடுகளைக் கட்டிக்கொண்டு தன் பயிற்சியாளருடன் களத்துக்குள் நுழைந்தார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் வழக்கமாக ஏழாவது அல்லது எட்டாவது வீரராகக் களமிறங்குவார். சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் பந்து வீச்சை விட்டுவிட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆயத்தமானார்.

முதலில் அவருக்கு பந்தின் மீது கவனம் செலுத்துவது குறித்து சிறு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் மூன்று டென்னிஸ் பந்துகளை எடுத்துக்கொண்டு ஹர்பஜனுக்கு மிகவும் அருகாமையில் அமர்ந்துகொண்டார். பின்னர் தன் இடது கையை சுழற்றிக்கொண்டே ஒவ்வொரு பந்தாக வலது கையிலிருந்து ரிலீஸ் செய்தார். பார்ப்பதற்கு இடது கையிலிருந்து பந்து வருவது போல் இருக்கும். இது பந்தின் மீது கவனம் செலுத்தும் ஒரு வகையான டெக்னிக். இதைச் சிறப்பாக எதிர்கொண்ட ஹர்பஜன் அடுத்த பயிற்சிக்குத் தயாரானார்.

இந்த முறை பயிற்சியாளர் 5 மீட்டர் இடைவெளியில் சென்று நின்றார். பின்னர் ஹர்பஜனை நோக்கி அண்டர்ஆர்ம் பவுலிங் ஸ்டைலில் ஒவ்வொரு பந்தாக வீச, அதை ஹர்பஜன் ஸ்ட்ரைட் திசையில் ஹிட் செய்து பறக்கவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேட்டிங் பயிற்சி செய்த பின்னர் மைதானத்தை விட்டு வெளியே வந்தார்.

சென்னை அணியில் முதன்முறையாகக் களமிறங்கவுள்ள ஹர்பஜன், பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் வாணவேடிக்கை நிகழ்த்தத் தயாராகி வருகிறார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018