மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

முடிந்தது கெடு: தொடங்குது காவிரிப் போர்!

முடிந்தது கெடு: தொடங்குது காவிரிப் போர்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், டெல்டா பகுதி போராட்டக் களமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. மத்திய அரசு கண்டிப்பாக மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் நம்பிக்கைத் தெரிவித்துவந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. மேலும், கடந்த ஆறு வாரங்களாக அல்லாமல் தற்போது ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நேற்று தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்படி, சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு முடிந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால், காவிரி நீரை நம்பியிருந்த டெல்டா பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

முன்னதாக கடைசி நாளான நேற்றைய தினமே காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தஞ்சாவூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், டெல்லியில் கடந்த நான்கு நாள்களாகப் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் நாடாளுமன்றச் சாலையில் ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் அதற்கு உரிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசைக் கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டுத் துரோகம் செய்திருக்கிறது. மத்திய அரசின் இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, முதல்கட்டமாக, நாளை (இன்று) முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கிட்டத்தட்ட 50 நாள்கள் உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தும், காலக்கெடு முடியும் வரை அதை அமைக்காமல் புறம்தள்ளி மத்திய அரசு காலம் தாழ்த்தியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களை வஞ்சித்துவிட்டதாகக் கருதுவதால், இதற்கு தேமுதிக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தில் உள்ள ஆளும்கட்சியினர் கடுமையான முடிவை எடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த மக்களும் இந்த இரண்டு ஆட்சிகளையும் புறந்தள்ளுவது உறுதி என மக்கள் மனதில் எழுந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முதல்கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சுங்க வரி தர மறுக்கும் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுபோலவே நேற்றிரவு காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னணி நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். காவிரி விவகாரம் குறித்து இன்று திமுக சார்பில் அவசர செயற்குழுவும் நடைபெறுகிறது. இதில் கண்டிப்பாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மறியல் உள்ளிட்ட போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

வெள்ளி 30 மா 2018