மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

விரைவில் தமிழகத்தில் 5 மனநலக் காப்பகங்கள்!

விரைவில் தமிழகத்தில் 5 மனநலக் காப்பகங்கள்!

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டுத் தெருக்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற பெண்களை மீட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 5 மறுவாழ்வு மையங்களை மத்திய அரசு தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் மட்டும் அரசு மனநலக் காப்பகம் ஒன்று செயல்படுகிறது. இது தவிர சில தனியார் மருத்துவமனைகளும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்துவருகின்றன. தமிழகத்தில் ஒரே ஒரு அரசு மனநலக் காப்பகம் மட்டும் செயல்பட்டுவருவதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டோரை சென்னைக்கு அழைத்துவருவதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,085 கோடி ரூபாய் செலவில், மாநில அரசுடன் இணைந்து மனநலக் காப்பகங்கள் தொடங்கப்படவுள்ளன. தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், தேனி, விழுப்புரம், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், பெண்களின் மனநல பாதிப்புக்கான அவசரப் பராமரிப்பு மற்றும் மீட்பு மையங்களை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. மத்திய அரசு 60 சதவீத நிதியையும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் இத்திட்டத்திற்காகத் தர உள்ளன. ஒரு மையத்திற்கு 3 மருத்துவர்கள், ஒரு உளவியல் நிபுணர், 15 செவிலியர்கள், இரண்டு பாதுகாவலர் உட்பட 30 பேர் பணியமர்த்தப்படுவார்கள்.

"மறுவாழ்வு மையங்களுக்கான ஊழியர்களை நியமித்தல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் நடந்துவருகின்றன. விரைவில் 5 மையங்களும் செயல்படத் தொடங்கும். அடுத்த கட்டமாக புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளிலும் மனநலக் காப்பகம் தொடங்கப்படும். மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்களும் பயன்பெறும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon