அவர் ராம பக்தரா? அம்பேத்கர் பேரன்கள் கண்டனம்!


அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அம்பேத்கரையும் ராமபக்தர் என பாஜகவினர் சொல்லுவார்கள் என அம்பேத்கரின் பேரன்கள் விமர்சித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் அனைத்து அரசு ஆவணங்களிலும் அம்பேத்கர் பெயரில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அம்மாநிலத்தின் ஆளுநர் ராம் நாயக் 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அம்பேத்கர் பெயரில் ‘ராம்ஜி’ என்ற பெயரையும் இணைத்து “டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்று மாற்றக் கோரிக்கை விடுத்தார்.
மாநில அரசிடமும் இது தொடர்பாக அவர் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, அம்பேத்கர் என்ற பெயரின் நடுவில் ராம்ஜி என்ற பெயரைச் சேர்க்க வேண்டும் என உ.பி. அரசு உத்தரவிட்டது. அதன்படி, இனிவரும் அனைத்து அரசு ஆவணங்களிலும் அம்பேத்கரின் பெயர், “டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்று இருக்க உத்தரவிட்டுள்ளது. உ.பி. அரசின் இந்த உத்தரவுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெயர் மாற்றம் தொடர்பாக அம்பேத்கரின் பேரன்கள் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் ஆனந்த் அம்பேத்கர் ஆகியோர் சிஎன்என்-நியூஸ் 18 ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்தனர். அப்போது, இந்தப் பெயர் மாற்றம் என்பது பாஜகவின் வெறும் வாங்கு வங்கி அரசியலின் ஒரு பகுதி எனக் குறிப்பிட்டனர்.
“2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வாக்காளர்களை அம்பேத்கர் ஒரு ராமபக்தர் என்று நம்பவைக்க பாஜகவினர் முயற்சி செய்வார்கள்” என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார். அம்பேத்கர் தனது கையொப்பத்தில் மட்டுமே பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என எழுதுவார் மற்றபடி வேறு எல்லா இடங்களிலும் பி.ஆர். அம்பேத்கர் என்றே குறிப்பிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்றம் தொடர்பாக தன்னையோ தங்களின் குடும்பத்தாரையோ உ.பி. அரசு தொடர்புகொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள ஆனந்த் அம்பேத்கர், “மராத்தியில் தனது பெயரை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என அவர் எழுதியபோதும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பி.ஆர். அம்பேத்கர் என்றே எழுதுவார். ராம்ஜி என்பதை அவரது பெயருடன் தற்போது சேர்ப்பது ஏன்? உத்தரப் பிரதேச அரசின் உத்தரவு நகல் கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்” என்று கூறியுள்ளார்.