மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

அமைப்புசாரா ஊழியர்களுக்கான பி.எஃப்!

அமைப்புசாரா ஊழியர்களுக்கான பி.எஃப்!

அமைப்புசாரா துறையில் நுழையும் புதிய ஊழியர்களுக்கான ஊழியர் சேம லாப நிதியில் (ஈ.பி.எஃப்.) முழுப் பங்களிப்பையும் மத்திய அரசே ஏற்க முடிவு செய்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.

மார்ச் 29ஆம் தேதியன்று டெல்லி சாஸ்திரி பவனில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், "பிரதான் மந்திரி ரோஜ்கார் புரோட்சாகன் யோஜனா திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.6,500 கோடி வரை உயர்த்தப்பட்டு ரூ.10,000 கோடியாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2016க்குப் பிறகு இணைந்த ஊழியர்களுக்கு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 8.33 சதவிகிதம் ஊழியர் சேம லாப நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அமைப்புசாரா ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்தக் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கான ஊழியர் சேம லாப நிதி வழங்குவதில் மூன்று ஆண்டுகளுக்கான முழு நிதிக்கும் மத்திய அரசு பொறுப்பேற்கும். இதன்மூலம் 1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தப் புதிய திட்டத்தால் 31 லட்சம் பேர் பயனடைவார்கள். இதற்கான செலவு ரூ.500 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அமைப்புசாரா துறைகளின் புதிய ஊழியர்களுக்கான பங்களிப்பை மத்திய அரசு 8.33 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்த முடிவெடுத்துள்ளது" என்றார்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon