மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

கருணாநிதி – மம்தா சந்திப்பு?

கருணாநிதி – மம்தா சந்திப்பு?

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரும் ஏப்ரல் 10, 11ஆம் தேதிகளில் சென்னை வரவிருப்பதாகவும், அப்போது திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்திக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிரான கட்சிகளைத் தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மார்ச் மாத தொடக்கத்தில், இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் பேசினார். மேலும், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க வேண்டுமென்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியதை வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதியன்று கொல்கத்தாவில் மம்தாவை நேரில் சந்தித்துப் பேசினார் சந்திரசேகர ராவ். இருவரும் கூட்டாட்சி முன்னணி என்ற பெயரில் தாங்கள் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்தனர். அதன்பின், இதுகுறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று (மார்ச் 26) திடீரென்று டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி. அதற்கடுத்த நாட்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த மிசா பாரதி உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். பாஜக எதிர்ப்பு அணியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோரையும் சந்தித்து மூன்றாவது அணி குறித்துப் பேசினார்.

முக்கியமாக, கடந்த 28ஆம் தேதியன்று இரவு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார். அப்போது, தேசிய அரசியல் தொடர்பாக இருவரும் விவாதித்ததாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மம்தா.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 10ஆம் தேதியன்று மம்தா பானர்ஜி சென்னை வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, திமுக தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் பயணமாக அவர் சென்னை வரவிருப்பதாகவும், மூன்றாவது அணிக்கான முயற்சியில் அவர் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது அணியில் சேர, அவர் திமுகவுக்கு அழைப்பு விடுப்பாரா என்று தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவும் இதுவரை எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.

இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுகவும் திரிணமூல் காங்கிரஸும் ஒன்றாக அங்கம் வகித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

வெள்ளி 30 மா 2018