மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய பொருளாதாரம்!

வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய பொருளாதாரம்!

பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய இரண்டு சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகி, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைநகர் டெல்லியில் மார்ச் 29ஆம் தேதி நடந்த இந்தியப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியத் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் பேசுகையில், “சில பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாகச் சரிவடைந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதுபோன்ற சில மாற்றங்களைக் கொண்டுவரும்போது சில தாக்கங்கள் ஏற்பட்டாலும், அந்த மாற்றங்களை எதிர்கால நலன் கருதி நாம் மேற்கொண்டுதான் ஆகவேண்டும். வங்கித் துறையில் வாராக் கடன் பிரச்சினை பெருகியுள்ளது. அதைச் சரிசெய்ய கொள்கை உருவாக்கம் செய்பவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்” என்றார்.

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று பல்வேறு மதிப்பீடுகள் கூறுகின்றன. இது சென்ற ஆண்டு அளவான 7.1 சதவிகித வளர்ச்சியை விட மிகவும் குறைவாகும். மேலும், வருகிற 2018-19 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதம் வரையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சுப்ரமணியன் கூறுவதுபோல, பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டியின் தாக்கங்கள் சீராகியுள்ளதால் இந்த வளர்ச்சியை அடைவது இந்தியாவுக்கு எளிதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனாலும், இந்தியப் பொருளாதாரத்தின் 7.5 சதவிகித வளர்ச்சியென்பது நாட்டில் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வளர்ச்சியாக இருக்காது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் சமீபத்தில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon