மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

சிறப்புக் கட்டுரை: வாகன ஓட்டிகளின் வருவாய் இழப்புக்குத் தீர்வு என்ன?

சிறப்புக் கட்டுரை: வாகன ஓட்டிகளின் வருவாய் இழப்புக்குத் தீர்வு என்ன?

இரா அஞ்சலி அன்வர்

மார்ச் 19ஆம் தேதியன்று நடைபெற்ற ஓலா மற்றும் உபெர் வாகன ஓட்டிகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றுள்ளது. மும்பையில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனா ஆதரவளித்திருந்தது. மும்பை ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாகப் பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கடந்த திங்களன்று நடந்த இந்தப் போராட்டத்தில் மும்பையில் மட்டும் சுமார் 40,000 பேர் பங்கேற்றிருந்தனர்.

இப்போது இந்தப் போராட்டம் முடிவுற்று முதற்கட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. படிப்படியாகக் கோரிக்கைகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உபெர் நிறுவனம் கூறியுள்ளது. இந்தப் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது ஊதிய உயர்வுதான். நிலையான வருவாயை அளிக்க வேண்டும் என்பது இவர்களின் ஒரு கோரிக்கை. ஓலா மற்றும் உபெரில் பெரும்பாலும் வாடகை வண்டிகள் நுண்தொழில்முனைவோரால் இயக்கப்படுகின்றன. தொடக்கத்தில் மாதத்துக்கு ஒரு லட்சம் வரை வருவாய் ஈட்டலாம் என்று உறுதியளித்துள்ளனர்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் ஒன்றுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை மட்டுமே இவர்களால் வருவாய் ஈட்ட முடிகிறது. இதிலும் அதிகத் தொகை கடன் செலுத்தவே சரியாகவுள்ளது. கடன் சுமையில் சிக்கியுள்ள பல வாகன ஓட்டிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்கவும் இயலவில்லை. போராட்டத்தில் பங்கெடுத்தால் ஒரு நாள் வருவாய் பாதிக்கும் என்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓலா ஓட்டுநர் நாகு மகேஷ் 2017ஆம் ஆண்டு அக்டோபரில் கடன் சுமை தாங்க இயலாமல் விஷமருந்தியுள்ளார். அதே ஆண்டு பிப்ரவரியில், பெங்களூரு ஓலா அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு வாகன ஓட்டிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக 2015ஆம் ஆண்டிலிருந்தே ஓலா மற்றும் உபெர் ஆகிய இரண்டு நிறுவனங்களின் வாகன ஓட்டிகளும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திக்கொண்டே வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு தீர்வை எட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்த நிலையில் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா வாடகை வாகன ஓட்டிகள் சங்கம் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் போராட்டத்தின் விளைவாக உபெர் நிறுவனத்திடம் சில நல்ல முடிவுகளை ஓட்டுநர்கள் பெற்றுள்ளனர். 15 நாள்களுக்குள் இவர்களுடைய பிரச்சினைகளை கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று உபெர் உறுதியளித்துள்ளது. இருப்பினும் சங்கங்கள் மற்றும் மற்ற குழுக்கள் இணைந்து நடத்திய இந்த வேலைநிறுத்தம் என்பது கூடுதல் பணம் பெறுவதற்காகத்தான் என்று கூறும் உபெர் நிறுவனத்தினர், வாகன ஓட்டிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளனர்.

அரசு அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், நீதிமன்றங்கள் உட்படப் பல தரப்பினரும் வாகன ஓட்டிகளின் நிலையை அலட்சியப்படுத்துகின்றனர். முக்கியமான ஊடகங்கள் இவர்களின் பிரச்சினையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தன. உபெர் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் வருவாய் இழப்பில் தடுமாறுவதால் அவர்களைச் சுதந்திரமான ஒப்பந்ததாரர்களாக இயங்க இங்கிலாந்து நீதிமன்றம் 2016ஆம் ஆண்டில் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கித் தீர்ப்பளித்தது. மற்றொருபக்கம் 2017ஆம் ஆண்டில் இந்திய நீதிமன்றம் வாகன ஓட்டிகளுக்கான, முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான தீர்வைக் கூறியது. அதே ஆண்டு மே மாதத்தில் வணிக ரீதியிலான வாகன ஓட்டுநர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றில் பணி நிலையை மதிப்பீடு செய்து ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களின் வாகன ஓட்டிகளுக்குத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் பணியாளர் பயன்களை அளிக்கலாம் என்றது.

தொழில் துறை பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், பணியாளர் அளவிலான பொருளாதாரம் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. ஆனால், பணியாளர்கள் அளவிலான வேலைவாய்ப்பைப் பாதிக்கும் காரணிகளை முன்கூட்டியே தடுக்கும் எந்தத் திட்டத்தையும் அரசாங்கம் செயல்படுத்தவில்லை. இந்தியப் பணிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான பணிகளுக்கு எந்தவிதமான ஒப்பந்தங்களும் போடப்படவில்லை. இவர்களுக்கு வருவாய் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் உள்ளது. வேலையில்லாத நிலையும் நீடிக்கிறது.

இதில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பொருளாதார நிலையும் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு அமைப்பு சாரா பணிகள் அமைப்பு சார்ந்த பணிகளாக மாறி வருகின்றன. வாடகை வண்டிகள் மட்டுமின்றி 270க்கும் அதிகமான வீட்டுச் சேவைகள் கடந்த 5 - 6 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ளன. இதுபோன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் உள்நாட்டினர்தான். தொழில்நுட்பத் தளங்கள் சேவை வழங்குநர்களாகச் செயல்படுகின்றன. இதன்மூலம் ஒப்பந்த வசதிகளும், முறையான வங்கி மற்றும் வரி நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு முறைப்படுத்தப்படுவதால் சில சட்டரீதியான ஒழுங்குமுறைகளையும் இந்தப் பணியாளர்கள் பெறுகின்றனர். வருவாய் வங்கிக் கணக்குக்குச் செல்வதால் வரி விதிப்பு வளையத்துக்குள்ளும் வருகின்றனர். வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பும் கிடைக்கிறது. வேலை நேரம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை போன்ற சில உரிமைகளை இவர்களால் பெற முடிகிறது.

இந்தப் பயன்களைப் பெறாத அமைப்பு சாரா ஊழியர்கள் பேரம் பேசித்தான் கட்டணத்தையே பெறும் நிலையும் உள்ளது. ஊக்கத்தொகை போன்ற சில காரணிகள் அவர்களின் வருவாயையும், பணி நிலையையும் பொறுத்துத்தான் கிடைக்கிறதே தவிர இது அனைத்து நிலை ஊழியர்களுக்கும் கிடைப்பதில்லை. ஓலா மற்றும் உபெர் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் ஒரு நாளைக்குத் தோராயமாக 12 முதல் 16 மணி நேரம் வேலை செய்கின்றனர். வேலைவாய்ப்பு நிலைமைகள் மோசமாகி வரும் சூழலில் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள் மட்டும் இதிலிருந்து தப்பிவிட இயலாது. ஊழியர்களின் தேவைகள், சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் போன்றவற்றுக்கும் தீர்வுகாண வேண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையிழப்புகள் அதிகரிப்பதும், வேலைவாய்ப்புகள் குறைவதும் நடந்துவருகிறது. இதற்கு ஒரு விளக்கமும் அளித்தார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல். அவர் அண்மையில் கூறுகையில், “இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்துவருவதும், வேலையிழப்புகள் அதிகரிப்பதும் இந்திய இளைஞர்கள் தொழில் முனைவில் அதிகம் ஈடுபட விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது. இது ஒரு நல்ல தொடக்கம்” என்று கூறியிருந்தார். ஊழியர்கள் வேலையிழந்து தடுமாறுவதை மறைத்து, மாயாஜால வார்த்தைகளால் அவற்றை மறைக்க முயல்வதையே இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

கூட்டுப் பங்கான்மை மற்றும் நுண்தொழில்முனைவு ஆகியன இந்தியப் பொருளாதார நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பணியிடங்கள் சுயதொழில் பணியிடங்களாக உள்ளன என்பது அரசுத் தரப்பு அறிக்கைகள் மூலமாகத் தெரிகிறது. தினக்கூலி பெறும் ஊழியர்களாகப் பணிபுரியும் பலர் தங்களுடைய செலவுகளுக்குக் கடன் பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஓலா மற்றும் உபெர் போன்ற தளங்களில் பணிபுரியும் நுண்தொழில்முனைவோரும் கடன் சுமையால் இதுபோன்ற ஒரு நெருக்கடியையே எதிர்கொண்டு வருகின்றனர்.

அகென்ஜர் ஆய்வறிக்கையின்படி, இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பப் பொருளாதாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தத் துறையில்தான் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இத்தகைய தொழிலாளர் துறையில் பணியாளர்களுக்கான நிலையான பணி வாய்ப்புகள், ஊக்கத் திட்டங்கள் போன்ற ஒழுங்குமுறை விதிகளை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மற்ற சேவைத் தளங்களான அர்பன்கிளேப் மற்றும் குயிக்கர் ஆகியவற்றில் இன்று அதிக தேவையுள்ளது. பணியாளர்களின் வருவாயும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நிலை நீண்டகாலத்துக்கு நீடித்திருக்க இயலாது. இந்தத் துறையில் மற்ற நிறுவனங்கள் புதிதாக நுழைந்தால் இந்தத் தளத்திலும் போட்டி அதிகரித்து நுண் தொழில் முனைவோர்கள் வருவாய் இழப்புக்கு ஆளாவார்கள். இதில் அனைவருக்கும் சம உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைப்பது சாத்தியமாகாது. எனவே முன்கூட்டியே இதுபோன்ற தளங்களுக்கான ஒழுங்குமுறைகளை, விதிகளை வகுக்க வேண்டியது நல்ல ஆட்சியாளர்களின் கடமையாகும்.

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

5 நிமிட வாசிப்பு

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடல்!

3 நிமிட வாசிப்பு

பிரசித்தி பெற்ற கோயில்கள்  மூடல்!

வெள்ளி 30 மா 2018