மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

பேரனை முன்னிறுத்தும் தேவகவுடா

பேரனை முன்னிறுத்தும் தேவகவுடா

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவகவுடா. மேலும், ஹசன் தொகுதியில் தனது கட்சியினர் போட்டியிட விரும்பவில்லையெனில், தனது பேரன் ப்ரஜ்வால் அங்கு போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.

வரும் மே 12ஆம் தேதியன்று கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ் எதிரெதிராகப் போட்டியிடும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி. இதன் தலைவரான ஹெச்.டி.தேவகவுடா, இன்று (மார்ச் 30) ஹசன் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லையெனத் தெரிவித்தார். முதுமையின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தனது ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட விரும்பவில்லையெனில், அங்கு தனது பேரன் ப்ரஜ்வால் ரேவண்ணா நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். ”அந்த மாவட்டத்தின் மூத்த தலைவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் போட்டியிட விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அந்த மாவட்ட மக்கள் ஒத்துக்கொண்டால், எனது பேரன் ப்ரஜ்வால் அந்த தொகுதியிலிருந்து போட்டியிடுவார். அவரது வெற்றிக்காக ஜனதாதளம் கட்சியினர் உழைப்பார்கள்” என்று கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளாக, அவர் கட்சிப்பணி ஆற்றி வருவதாகக் குறிப்பிட்டார் தேவகவுடா.

மூன்றாவது அணியை தேசிய அளவில் அமைப்பது குறித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் முயற்சி பற்றிய கேள்விக்குப் பதிலளித்த தேவகவுடா, இப்போது எந்த முடிவும் எடுக்க விரும்பவில்லையெனக் கூறினார். “கர்நாடகா தேர்தல் தான் இப்போது முக்கியம். அது முடிந்தபிறகு, இதுகுறித்துப் பேசவுள்ளேன். இதுவரை, இரண்டு தேசியக் கட்சிகளையும் (காங்கிரஸ், பாஜக) எதிர்த்துப் போராடி வருகிறேன்” என்று தெரிவித்தார்.

தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக, தேவகவுடாவின் மகன் குமாரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்குகள் சிதறும் வாய்ப்புள்ளதால், தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் சேர்வதை தேவகவுடா விரும்பவில்லை என கூறப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதிகளில் தங்களுக்கு தீவிரமான செல்வாக்கு இருப்பதாக நம்பும் தேவகவுடா, தேர்தல் முடிவுக்குப் பிறகே கூட்டணி குறித்த முடிவை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon