மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020

ஒரு வாரத்தில் 100 குரங்குகள் இறப்பு!

ஒரு வாரத்தில் 100 குரங்குகள் இறப்பு!

உத்தரப் பிரதேசத்தில் ஒரு வாரத்தில் சுமார் 100 குரங்குகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டபார்சி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குரங்குகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்து வருகின்றன . குரங்குகள் இறக்கும் தகவலை கிராம மக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், அந்தக் கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 10,000க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை பயணிகளிடமும் பக்தர்களிடமும் பை, உணவுப் பொருட்களைப் பறித்துச் செல்வதும் வழக்கம். எனவே, குரங்குகளின் தொல்லையால், அவற்றிற்கு விஷம் வைத்துக் கொன்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். அதை மறுத்த கிராம மக்கள் குரங்குகள் இறந்தது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், அருகில் உள்ள உணவு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சௌமெயின் சட்னி (chowmein chutney) சாப்பிட்டதால் குரங்குகள் இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர் இறந்த குரங்குகளின் உடல்களை இன்று(மார்ச் 30) பிரேத பரிசோதனை செய்தார். அவற்றின் நுரையீரல்கள் சுருங்கியிருப்பதாகவும், அவற்றின் ஈரல்கள் கறுத்திருப்பதாகவும் தெரிவித்தார். குரங்குகளின் இறப்புக்கு உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. பிரேத பரிசோதனையின் அறிக்கை பெறப்பட்ட பின்பே அதற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon