மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

திமுக கூட்டத்தில் கமல்?

திமுக கூட்டத்தில் கமல்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதைவிட, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், மும்பையில் நடைபெறவுள்ள சினிமா நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காகச் சென்னை விமான நிலையம் சென்றார். அங்கு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுப்பதால் பலனில்லை என்று தெரிவித்தார்.

“அதிமுகவின் உண்ணாவிரத நடவடிக்கை கால தாமதமானது. உண்ணாவிரதம் இருப்பது எந்தளவுக்குப் பலன் அளிக்குமென்று தெரியாது. அரசியல்ரீதியான அழுத்தம் கொடுப்பதுதான் சரியானது என்பது எனது கருத்து. அழுத்தம் எப்படிக் கொடுத்தாலும், நியாயமான முறையில் நடக்கும் என்று நினைத்தால் அதனைச் செய்யலாம்.

அழுத்தம் என்பது தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான். உங்கள் கரத்தை வலுப்படுத்த மாட்டோம் என்று சொல்ல வேண்டும். அவர்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அதனைச் செய்தால், அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். தமிழக அரசியலிலிருந்து, இதனைத் தொடங்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் இதுபற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை எதுவும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டார் கமல்.

ஏப்ரல் 1ஆம் தேதியன்று திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், அன்று வேறொரு கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேறு யாரேனும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்க முற்படுவது காலவிரயம் என்றும், தற்போது தமிழகத்தில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார் கமல். காவிரி விவகாரத்தில், தனது கட்சியின் சார்பாகத் தேவைப்பட்டால் போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.

விழுப்புரம் திருக்கோவிலூர் ஆராயி குடும்பத்தினர் தாக்கப்பட்ட சம்பவத்தில், கமல்ஹாசன் நிதியுதவி ஏதும் அளிக்கவில்லை. இதுபற்றிய கேள்விக்கு, ”நான் ஒரு தனிமனிதன். இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன். அரசோ, வேறெதுவுமோ இல்லை. என்னால் என்ன செய்ய இயலுமோ, அதனைச் செய்வேன். நிதி இல்லாததும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். இதில் பாரபட்சம் ஏதுமில்லை” என்று அவர் கூறினார்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon