மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

வரி மோசடியாளர்கள் பட்டியல் வெளியீடு!

வரி மோசடியாளர்கள் பட்டியல் வெளியீடு!

ரூ.490 கோடிக்கு மேல் வரி செலுத்தாமல் மோசடி செய்த 24 கடனாளிகளின் தேசிய அளவிலான பட்டியலை வருமான வரித் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

வருமான வரித் துறையின் டெல்லி முதன்மை பொது இயக்குநரகம் சார்பாக ’வருமான வரி மற்றும் கார்பரேட் வரி செலுத்தாத மோசடியாளர்கள் பட்டியல்’ என்ற தலைப்பில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வருமான வரி செலுத்தாதவர்கள், வரி மோசடி செய்து விட்டுத் தலைமறைவானவர்கள் மற்றும் வரி செலுத்தாத நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 24 தனிநபர்களின் பெயர்கள், நிறுவனங்களின் பெயர்கள், அதில் பணியாற்றும் இயக்குநர்கள், பங்குதாரர்கள், தனிநபர்களின் பிறந்த தேதி, பான் எண் ஆகிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. உணவு பதப்படுத்துதல், நகை வர்த்தகம், மென்பொருள் சேவை, ரியல் எஸ்டேட், பானங்கள் உற்பத்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதிகபட்சமாக, டெல்லியைச் சேர்ந்த ஸ்டாக் குரு நிறுவனமும் அதன் பங்குதாரர் லோகேஷ்வர் தேவ் ரூ.86.27 கோடி வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இந்நிறுவனம் 2009-10 மற்றும் 2010-11 ஆண்டுகளுக்கான வரியைச் செலுத்தவில்லை. அதேபோல, கொல்கத்தாவைச் சேர்ந்த அர்ஜூன் சோன்கர் ரூ.51.37 கோடி வரி மோசடி செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிஷன் சர்மா ரூ.47.52 கோடி வருமான வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார். அகமதாபாத், கவுகாத்தி, விஜயவாடா, நாசிக், சூரத், டெல்லி, வதோதரா, கொல்கத்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் மொத்தம் ரூ.490 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளன.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon