மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

அதிமுக எம்.பி.க்களின் கலகக் குரல்!

அதிமுக எம்.பி.க்களின் கலகக் குரல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ராஜினாமா செய்ய உள்ளதாக அதிமுக வின் மாநிலங்களவை எம்பியான எம்.பி முத்துகருப்பன் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வளாகத்திலும் அவை நடந்த 17நாட்களாக அதிமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிகூட சாய்க்கவில்லை.

மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத சூழலில், இதனைக் கண்டித்து தமிழக எம்.பி.க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது வலுவாக எழுந்துள்ளது. நேற்று முதல்வரை சந்தித்த அதிமுக எம்.பி.க்கள் அருண்மொழித் தேவன், கோ.அரி, ப.குமார் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று முதல்வரிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், இன்னும் இரு நாட்களில் சபாநாயகரிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார் அதிமுக எம்.பி முத்துகருப்பன்,

இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நான் பிரதமரிடம் நேருக்கு நேர் வலியுறுத்தினேன். அதேபோல பாஜக தலைவர் அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனால் இப்போது ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறேன்’’ என்றார்.

நாம் இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘’தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே போதும் என்பதால் அவர்களின் நலனிலேயே அதிக கவனம் செலுத்துகிறார். எம்.பி.க்கள் கேட்கும் விஷயங்கள் எதுவும் பெரிதாக தமிழக ஆட்சியில் நடப்பது கிடையாது. இதனால் பல எம்.பி.க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் எம்.பி.க்களுக்கு மாவட்டச் செயலாளர் போன்ற வலிமையான கட்சிப் பதவிகளும் கிடையாது. விழுப்புரம் மாவட்டச் செயலாளராக எம்பி லட்சுமணன் இருக்கிறார். மற்ற பெரும்பாலான எம்பிக்கள் டம்மியாகத்தான் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா இருந்தபோதே எம்பி.க்களை இப்படித்தான் வைத்திருந்தார். ஆனால்,எடப்பாடி பழனிசாமியும் எம்பிக்களை கொலு பொம்மையாகவே வைத்திருக்கிறார். இந்த அதிருப்தி பல எம்.பி.க்களுக்கு இருக்கிறது. அதனால்தான் காவேரி விஷயத்தை வைத்து எம்பிக்கள் கலகக் குரல் எழுப்பி வருகிறார்கள்’’ என்கிறார்கள் அதிமுகவில்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon