மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

சென்னையில் மோடிக்குக் கறுப்புக் கொடி!

சென்னையில் மோடிக்குக் கறுப்புக் கொடி!

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க இன்று (மார்ச் 30) திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இதுதொடர்பாக வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், "கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஏழாவது தீர்மானமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது எனவும், இதற்காக வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திமுகவுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அதில் எந்த வகையான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் முடிவெடுக்கப்படும். இதற்கான அதிகாரத்தை எனக்குக் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

"வரும் ஏப்ரல் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி தமிழகம் வரும் பிரதமருக்கு திமுக சார்பில் கறுப்புக் கொடி காட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றும் கூறிய அவர், மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். இதுகுறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. ஆனால் அதில் நாங்கள் வாதி கிடையாது. எனவே எங்களால் அவமதிப்பு வழக்குத் தொடர முடியாது. இதனை மாநில அரசுதான் தொடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், "காவிரி விவகாரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் இயற்ற முடியாத அளவுக்குத் தெம்பில்லாத அரசாகத்தான் இந்த அரசாங்கம் உள்ளது. ஊழல் செய்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி பறிபோய்விடக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு மண்டியிட்டு அடிமை போல தமிழக அரசு இருந்துகொண்டிருக்கிறது. அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், அடுத்த நிமிடமே திமுக எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர். ஆனால் அதற்கான தைரியம் தற்போதைய ஆளுங்கட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை" என்றார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வெள்ளி 30 மா 2018