மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஏழு வருடங்களுக்குப் பின் மாற்றம்!

ஏழு வருடங்களுக்குப் பின் மாற்றம்!

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களைச் சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று (மார்ச் 30) ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மூன்றாவது போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய மூன்று வீரர்கள் (ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பென்ஃகிராப்ட்) இந்தப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்குப் பதிலாக ஜோ பர்ன்ஸ், மாத் ரேன்ஷேவ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டனர். அதில் மேக்ஸ்வெல் தவிர மற்ற இரண்டு வீரர்களும் 11 பேர் கொண்ட குழுவில் விளையாடினர். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் காயம் காரணத்தால் விலகியதால், அவருக்குப் பதிலாக புதுமுக வீரர் சாட் சயேஸ்ர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆஸ்திரேலிய அணி, கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் இல்லாமல் களமிறங்கியது இல்லை. ஏழு வருடங்களுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி மீண்டும் டெஸ்ட் போட்டியில் களம் கண்டது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எளிதில் எதிர்கொண்டு ரன் சேர்க்கத் தொடங்கியது. தொடக்க வீரர் டீன் எல்கர் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹசிம் அம்லா 27 ரன்கள் சேர்த்து பேட் கம்மிஸ் பந்தில் ஹான்ட்காம்ப்யிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மொத்தமாக இதுவரை 117 டெஸ்ட் போட்டிகளில் 8,966 ரன்களை சேர்த்துள்ள அம்லா இன்னும் 34 ரன்கள் சேர்த்திருந்தால், டெஸ்ட் போட்டிகளில் 9,000 ரன்களைச் சேர்த்த மூன்றாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். ஆனால், அந்த வாய்ப்பை அம்லா தவறவிட்டார். இன்னும் ஒரு இன்னிங்ஸ் மீதமுள்ள நிலையில், அம்லா 9,000 ரன்களை இந்தப் போட்டியில் கடந்து விடுவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

அம்லா ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் ஏபி டீவில்லியர்ஸ் 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அறிமுக வீரர் சயேஸ்ர்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழக்கத் தொடங்கினர். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடி வரும் ஏய்டன் மார்க்ராம் 152 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

அவருடன் டீ காக் 7 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களைச் சேர்த்துள்ளது. இது ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் ஒரு நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்களில் ஒன்றாகும்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon