மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: ஸ்டெர்லைட் விதி மீறல்களும் ஆபத்துகளும்!

சிறப்புக் கட்டுரை: ஸ்டெர்லைட் விதி மீறல்களும் ஆபத்துகளும்!

வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி…

ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழக அரசு 1994இல் அனுமதி கொடுத்தது. 1996இல் மேலும் சில அனுமதிகளை மாநில அரசிடமிருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. 2007இல் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் கொண்டு வரவும் அனுமதி பெற்றுவிட்டனர். கிராம மக்களிடமிருந்து 1,616 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி, அதில் 600 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்குக் கொடுத்தாகிவிட்டது. ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு 2009ஆம் ஆண்டே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையிடம் அனுமதி பெற்றுவிட்டனர். இந்த அனுமதியெல்லாம் டிசம்பர் 31, 2018ஆம் தேதியோடு முடிகின்றன.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் ஆய்வுசெய்தனர். 1998இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவில் 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குச் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாக்பூர் நீரி நிறுவனம் 1998ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும் நிலம், நீர், காற்று மண்டலத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வறிக்கை தந்திருந்தது. ஆனால், அதே நிறுவனம் 2003ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக ஆய்வறிக்கை தந்தது.

1998 நவம்பர் அறிக்கைக்குப் பின்னர் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் 1.22 கோடி ரூபாய் வழங்கியதுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதியின்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், வேதாந்தா குழுமம் 2003 டிசம்பரில் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களைப் பட்டியலிட்டபோது இங்கே ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாகத் தெரிவித்தனர்.

விதி மீறல்கள்

முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை 21.9.2004இல் ஆய்வு செய்தபோது பல்வேறு விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக உற்பத்தித் திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளைச் சுத்திகரிக்கவும் பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால், இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் ஒப்புதல் அளித்திருந்தால் அதைத் திரும்பப் பெறுமாறும் இந்தக் குழு அறிவுறுத்தியது. ஆனால் மறுநாளே (22.9.2004) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடைவிட அதிகமாக 1,64,236 டன்கள் ஆனோடை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2004 நவம்பரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு இதைக் கண்டறிந்துள்ளது.

உருளை வடிவத்தில் அமைந்த தாங்கு உலைகள் இரண்டையும் கழிவுகளைத் தூய்மை செய்யும் உலை ஒன்றையும் ஆனோடு உலை ஒன்றையும் ஓர் ஆக்சிஜன் பிரிவையும் ஒரு கந்தக அமிலப் பிரிவையும் ஒரு காஸ்டர் பிரிவையும் ஒரு கன்வெர்ட்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமிலப் பிரிவுகளும் சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டுவருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், 2005இல் உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு இதையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது. அனுமதியின்றிக் கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005இல் தொடங்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல் - 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்ட அளவைவிட 47% அதிகம்.

உச்ச நீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது. 7.4.2005இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, ‘உச்ச நீதிமன்றக் குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்’ என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறிக் கட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் 24.7.2010 அன்று ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் தொடங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது. வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால் வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படும். 2,000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படும். 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படும். இவை காற்றைக் கடுமையாக மாசுபடுத்தும். தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர் டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை சோதனைச்சாலையில் ஆய்வு செய்தார். “மண்ணும் நீரும் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டிருப்பதாகவும் கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று அந்த ஆய்வின் அடிப்படையில் கூறியுள்ளார்.

(ஆலையால் உடல்நலம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி நாளை...)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon