மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

காவிரி: ஏப்ரல் 11இல் பாமக முழு அடைப்பு!

காவிரி: ஏப்ரல் 11இல் பாமக முழு அடைப்பு!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 11ஆம் தேதி பாமக சார்பில் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கால அவகாசம் கடந்த 29ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கும் ஆரம்பக்கட்ட பணிகள்கூட நடைபெறவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளும் தமிழக மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் அறிவித்த வண்ணம் உள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது. அதே தினத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் திமுக, அதில் எந்த வகையான போராட்டம் என்பது குறித்து முடிவெடுக்கவுள்ளது.

இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை தி.நகரிலுள்ள ஸ்ரீமஹாலில் நேற்று (மார்ச் 30) பாமக சார்பாக விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதன்பிறகு பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவுடன் விவசாய அமைப்புகளின் சார்பில் ஏப்ரல் 11ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மார்ச் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான நேர்மையான முயற்சிகளை மத்திய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான சில நாள்களிலேயே மேலாண்மை வாரியம் அமைக்கப் போவதில்லை எனத் தனது மனநிலையை மத்திய அரசு வெளிப்படுத்திவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசின் துரோகத்தைவிட மாநில அரசின் துரோகம் பெரியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக விவசாயிகளுக்குப் போட்டிப் போட்டுக்கொண்டு துரோகம் இழைத்துவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இக்கூட்டம் கண்டனங்களைத் தெரிவிக்கிறது’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களின் பாசன, குடிநீர் ஆதாரமாகக் காவிரிதான் திகழ்கிறது. இந்த மாவட்டங்களிலும் சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய ஏழு மாநகராட்சிகளிலும் வாழும் ஐந்து கோடி தமிழக மக்கள் குடிநீருக்காக காவிரி நீரையே நம்பியுள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காவிரி விவகாரத்தில் இழைக்கப்படும் துரோகங்களைச் சகித்துக்கொண்டு, உரிமைகளை இழந்து உணர்வற்றவர்களாக இருக்க முடியாது என்று இக்கூட்டம் கருதுகிறது.

காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்து அதிகாரங்களையும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இதில் அரசியலுக்கோ, வேறு கருத்து வேறுபாடுகளுக்கோ இடமில்லை; நாம் அனைவரும் தமிழர்கள்; காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் முழு அடைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புக் கோருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக போராட்டம் தள்ளிவைப்பு

இந்நிலையில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம், ஏப்ரல் 3ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon