மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: வாழ்வியல் இசையை மீட்டும் கலைஞன்!

சிறப்புக் கட்டுரை: வாழ்வியல் இசையை மீட்டும் கலைஞன்!

மதரா

சென்னை கலைக் கண்காட்சியில் கலைஞர்களின் அனுபவங்களும் வெளிப்பாடுகளும்

கலைஞர்களின் படைப்புகளைப் பார்த்தல், அவர்களோடு கலந்துரையாடுதல், தினம் ஒரு சிறப்பு விருந்தினர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் என ஒரு வார காலம் கோலாகலமாகச் சென்ற சென்னை கலைக் கண்காட்சி நேற்றுடன் (மார்ச் 30) நிறைவு பெற்றுள்ளது.

காட்சியில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளில் சரண்ராஜின் படைப்புகள் தனித்துத் தெரிகின்றன. கலைக் கண்காட்சி என்றால் ஓவியங்கள், சிற்பங்கள் இடம்பெறும் என்று நாம் எண்ணினால் அது மட்டும் இல்லை... வீடியோ, ஆடியோ மூலம் உருவாக்கும் படைப்புகளையும் அதில் சேர்க்கலாம் என்று கூறுகிறார் சரண்ராஜ்.

மாணவக் கலைஞர்கள் ஏதேனும் குறிப்பிட்ட ஒரு தொழிலை மேற்கொள்ளும் சில தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களது பணிகள், பாடுகள் குறித்து கேட்டறிந்து அதைக் கலைப் படைப்பாக்க முயற்சித்தால் சரண்ராஜ் வெவ்வேறு பணிகளைச் செய்யும் 100 பேரைச் சந்திக்க வேண்டும் என முடிவெடுத்துக்கொள்கிறார். சிறு வயதிலிருந்து, ஊரை விட்டு வெளியேறும் வரை சரண்ராஜுக்கு முடி வெட்டிவிட்ட நபர், மருத்துவமனை பற்றிய பரிச்சயம் இல்லாதபோதும் இன்றுவரை ஊருக்கே பிரசவம் பார்க்கும் ஆண்டிச்சி என்ற மருத்துவச்சி, 100 வயதிலும் மண்வெட்டி பிடித்து விவசாயம் செய்யும் பெரியவர், பெண் விவசாயி ஒருவர், நடவுக்கு ஆள் சேர்த்து கூட்டிச் செல்லும் கொத்தாள், கல் உடைக்கும் தொழிலாளர்கள் (அவரது அம்மா உட்பட), படிப்பு வரவில்லை என்பதால் ஆறாம் வகுப்போடு கறிக்கடைக்கு வேலைக்குச் சென்று 20 வருடங்களாக ஒரே கடையில் கறி வெட்டிக்கொண்டிருக்கும் அவரது நண்பன், துப்புறவாளர், மயானத் தொழிலாளி எனக் கொடுக்கப்பட்ட குறைவான நேரத்தில் 33 பேரைச் சந்தித்து அவர்கள் பணிகள், பாடுகள் குறித்து கேட்டறிந்து அவர்களை போர்ட்ரைட் செய்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கரடிப்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ். ஊரில் உள்ள இருநூறு குடும்பங்களில் பெரும்பாலானோர் மேற்கொள்வது கல் உடைக்கும் தொழிலைத்தான். ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கல் குவாரி கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. சிறு வயதிலிருந்தே சரண்ராஜின் தாய் தந்தை, அவர், அவருடைய சகோதர சகோதரிகள் என அனைவரும் அந்தக் கல் குவாரியிலேயே தங்கள் வாழ்வின் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டுள்ளனர். அரசு அந்த குவாரிக்குத் தடை போட்ட பிறகு ஒருநாள் அந்தக் கல் குவாரிக்குச் செல்ல நேர்கிறது. முதன்முறையாகக் கல் உடைக்கும் சத்தம் இல்லாத அந்தப் பகுதியின் பேரமைதி தனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் சரண்ராஜ். கல் உடைக்கும் சத்தம் என்பது அந்த ஊர் மக்களின் வாழ்வியல் இசை என்கிறார். அந்தச் சத்தத்தை அல்ல, அந்த இசையைப் பார்வையாளர்களும் உணர வேண்டும் என்பதற்காகக் கல் உடைக்கும் சத்தத்தை ஒலிப்பதிவு செய்து கண்காட்சியில் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பதாக அமைத்திருந்தார். விடாமல் கேட்டுக்கொண்டே இருந்த அந்தச் சத்தம் பார்வையாளர்களை ஈர்த்தது.

மற்றொரு ஆடியோ படைப்பு ஒப்பாரிப் பாடலைப் பதிவு செய்திருப்பது. சரண்ராஜின் ஊரைச் சேர்ந்த ஒரு பாட்டிக்கு, அவரது ஊர் மக்கள் கூறுவதுபோல “கிழவிக்கு வேலையே இழவு வீட்டுக்குப் போய் ஒப்பாரி பாடுவதுதான்”. எங்கு இழவு விழுந்தாலும் பணம் கொடுத்து இவரை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். இவர் பாடும் ஒப்பாரி கல் நெஞ்சக்காரர்களையும் அசைத்துப் பார்த்து அழுகையை வரவழைத்துவிடும். அரங்கில் காமாட்சி விளக்கு எரிந்துகொண்டிருக்க அதன் அருகில் தொங்கிக்கொண்டிருக்கும் ஹெட்போனை எடுத்துக் காதில் வைத்தீர்கள் என்றால் சூழலை மறந்து சில கண்ணீர்த் துளிகளை உதிர்த்துவிட்டு வருவீர்கள் என உறுதியாகச் சொல்லலாம்.

வீடியோவாக சரண்ராஜ் உருவாக்கியுள்ளது சற்று சுவாரஸ்யமான படைப்பு. தொழிலாளிகளை முன்வைக்கும் காட்சி ஆதலால் மூன்று வெவ்வேறு தொழில்களைச் செய்பவர்களை வீடியோவாகப் பதிவு செய்து இணைத்துள்ளார். சரண்ராஜ் இதில் தேர்ந்தெடுத்திருக்கும் தொழிலாளிகள், அரசியல்வாதி, ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர் மற்றும் விஜிபியில் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத சிலை மனிதன் ஆகியோர்.

சரண்ராஜிடம் அவரது படைப்புகள் குறித்து நாம் கலந்துரையாடியபோது...

வெவ்வேறு மீடியங்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

“மீடியத்தை நான் தேர்ந்தெடுப்பதில்லை. அந்தக் கருப்பொருள்தான் தேர்ந்தெடுக்கிறது. உதாரணத்துக்குக் கல் உடைக்கும் சத்தத்தை ஒலி வடிவமாகக் கொடுத்ததைச் சொல்லலாம். அந்தச் சத்தத்தோடுதான் எங்கள் வாழ்க்கை இருக்கிறது. அது ஒருநாள் இல்லாமல் போனபோது மிகப் பெரிய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. தொழிலாளர்களை முன்னிறுத்தும் காட்சி என்றதும் எனக்கு முதலாவதாகத் தோன்றியது அந்த நிசப்தம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பைத்தான். எங்களது வாழ்வியல் இசையை அனைவரும் கேட்க வேண்டும் என்றால் நான் அதை ஓவியத்திலோ, சிற்பத்திலோ கொண்டு வர முடியாது. அதே போல்தான் ஒப்பாரி பாடல் பதிவும். எனவே, எனது கருப்பொருள்தான் மீடியத்தைத் தேர்வு செய்கிறது.”

இதை இந்த மீடியத்தில்தான் கூற வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறீர்களா?

நிச்சயமாக. ஏனென்றால் ஒரு கருப்பொருளை நமக்குத் தெரிந்த மீடியத்தில் கொண்டுவர முடியாது என்றால் அதை விட்டுவிடுவது நல்லது. சரியான மீடியத்தில் சொன்னால்தான் அது முழுமை பெறும். இல்லையென்றால் சில காலம் அந்த முயற்சியைத் தள்ளிப்போடலாம். ஏனென்றால் நமக்குத் தெரிந்த மீடியத்திலேயே இன்னும் கொஞ்சம் அனுபவம் ஏற்பட்ட பின் அதைக் கொண்டுவர முடியலாம்.

வீடியோ பதிவுக்கான கரு மற்றும் அதன் உருவாக்கம் பற்றி கூறுங்கள்

நான் போர்ட்ரைட்டில் பதிவு செய்த அனைவருமே உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டவர்கள். உடல் உழைப்பு மட்டும்தான் உழைப்பா என்ற கேள்வி எனக்குள் வந்தது. அந்தக் கேள்விக்கான விஷயமாகத்தான் இதைச் செய்தேன். அந்த வீடியோவில் ஓர் அரசியல்வாதி மைக் பிடித்துப் பேசிக்கொண்டிருப்பார், ரயில் நிலையத்தில் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார், விஜிபி சிலை மனிதன் அசையாமல் நிறுகொண்டிருப்பார். இவற்றைக் காட்சிப்படுத்தியிருப்பேன். பெரிய உடல் உழைப்பைக் கொடுக்காவிடினும் இவர்கள் ஏதோ ஒன்றைக் கொடுத்துத்தானே தனக்கான ஊதியத்தைப் பெறுகிறார்கள். நான் சந்தித்த மற்ற நபர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேற்றுமை உள்ளது. அதற்காக இவர்கள் உழைக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. இது குறித்து எனக்குள் இருந்த கேள்வியாகத்தான் இதைச் செய்தேன். இதை வேறு எந்த மீடியத்திலும் சொல்ல முடியாது என்பதால் இதில் கூறினேன். எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கும் சந்துரு சார் இதற்காக என்னைப் பாராட்டியது மகிழ்ச்சியான அனுபவம். ஏற்கெனவே குறும்படங்கள் இயக்கியுள்ளதால் எனக்கு இதன் உருவாக்கம் எளிதாக இருந்தது.

இந்த கலைக் காட்சிக்கான தயாரிப்பில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

நான் உட்பட இதில் பங்கெடுத்த அனைவருக்கும் இது நல்லதொரு அனுபவமாக இருந்தது. கலை குறித்த பார்வை எனக்குள் ஏற்கனவே இருந்தாலும் இந்தப் பயணத்தில்தான் இந்திய அளவில், சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல கலைஞர்களின் அறிமுகம் ஏற்பட்டது. கிருஷ்ணப்ரியா, நரேந்தர் அவர்களுடைய வீட்டிலேயே தங்கி இதன் தயாரிப்புகளை மேற்கொண்டோம். அப்போது எழுந்த விவாதங்கள் எல்லாம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளன.”

33 பேரைச் சந்தித்து உரையாடி அவர்களை போர்ட்ரைட் செய்ததன் மூலம் அவர்கள் வாழ்வில் என்ன மாற்றம் நிகழும்?

“இது எனக்கான அனுபவமாகத்தான் இருக்கிறது. நிறைய நிகழ்வுகளுக்குச் சென்று வரைந்துள்ளேன். ரயில் பயணங்களின்போது அறிமுகம் இல்லாத நபர்களை வரைந்து அவர்களிடமே கொடுத்துள்ளேன். அதே போல் இத்தனை ஆண்டு கால வாழ்வில் என்னுடன் சேர்ந்து பயணித்த நபர்களை இதில் வரைந்துள்ளேன். வரையும் நேரத்தில் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். அந்த உரையாடலுக்கான பதிவாகத்தான் இந்த போர்ட்ரைட்டை பார்க்கிறேன்.”

ஒப்பாரி பாடல் ஒலிக்கும் ஹெட்போனுக்கு அருகில் காமாட்சி விளக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏன், அந்தத் துக்க வீட்டின் சூழலை உணர்த்துவதற்காகவா?

“ஆம். ஆனால் இந்தக் காட்சியில் அதை இன்னும் வேறு மாதிரியாக வடிவமைக்க எண்ணினேன். இடப் பற்றாக்குறை காரணமாக அதைச் செய்ய முடியவில்லை. எப்படியென்றால் ஓர் இருட்டு அறையில் ஒரு காமாட்சி விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்க வேண்டும். பார்வையாளர்கள் அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலியில் சென்று அமர்ந்து அதை ஹெட் போனில் கேட்க வேண்டும். அப்போது இன்னும் நெருக்கமான உணர்வைப் பார்வையாளர்களுக்கு தர முடியும். கல் உடைக்கும் ஆடியோவையும் பார்வையாளர்கள் இருட்டு அறையில் கீழே பரப்பி வைக்கப்பட்ட ஜல்லிக்கற்களில் நடந்து சென்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.”

படைப்பாளியின் பணி படைப்பை உருவாக்கிய பின்னும் தொடர்கிறதா?

“ஆம். படைப்பை உருவாக்குவதே எனது மனதில் உள்ள உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதற்குத் தானே. அதை சரியான விதத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியதும் எனது பணி தான். அதைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது.”

அடுத்த கட்ட திட்டமிடல் என்ன?

“மெட்ராஸ் ஆர்ட் கலெக்டிவ் மூலமா தொடர்ச்சியாக இயங்கணும். இந்தியச் சூழலில் கலைஞர்களுக்குச் சமூகம் பற்றிய பார்வை குறைவாக உள்ளது. முடிந்த அளவு கலை மூலம் நாம் உண்மையாகப் பேச வேண்டும்.”

மாணவக் கலைஞர் சரண்ராஜ் முகநூல் பக்கம்

(கண்காட்சியின் பொறுப்பாளர் கிருஷ்ணப்ரியாவின் நேர்காணல் நாளை காலை 7 மணி பதிப்பில்)

உழைப்பைப் பேசும் கலைக் கண்காட்சி!

யாருக்குச் சிலை வைப்பது?

அம்மாவும் தொழிலாளிதான்!

கலையால் என்ன செய்ய முடியும்?

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon