மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

அமித் ஷா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

அமித் ஷா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது தேர்தல்ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

கர்நாடகச் சட்டப்பேரவை தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையொட்டி அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா, முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு ஆதரவாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று (மார்ச் 30) மைசூரில் பிரசாரம் செய்த அவர், “கர்நாடகா ஊழல் விவகாரத்தில் சித்தராமையாவுக்குப் பதில் எடியூரப்பா பெயரை வாய் தவறி கூறி விட்டேன். நான் வாய் தவறி பேசியதால் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நான் தவறு செய்யலாம். ஆனால், கர்நாடக மக்கள் தவறு செய்ய மாட்டார்கள். அவர்கள் சித்தராமையாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, சமீபத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக தொண்டர் ராஜூவின் வீட்டுக்குச் சென்ற அமித் ஷா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை அமித் ஷா மீறியுள்ளதாகக் கர்நாடக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “கொலை செய்யப்பட்ட ராஜூவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலையை அமித் ஷா மற்றும் அவருடன் இருந்த தலைவர்கள் வழங்கியுள்ளனர். இது தேர்தல் விதிமுறையை மீறும் செயலாகும். பலமுறை அமித் ஷா மைசூருக்கு வந்தபோதிலும், ராஜு குடும்பத்துக்கு நிதி வழங்க அவர் முயற்சிக்கவில்லை. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்காளர்களைக் கவருவதற்காக நிதி அளித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் அமித் ஷா, எடியூரப்பா மற்றும் ஏனைய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தொடர் சர்ச்சையில் அமித் ஷா சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon