மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

மீம்ஸ்களால் மதிப்பிழந்த ஸ்மித்?

மீம்ஸ்களால் மதிப்பிழந்த ஸ்மித்?

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் விலை பல மடங்கு குறைந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பந்தைத் சேதப்படுத்திய குற்றத்துக்குத் துணையாக இருந்ததால் அவருக்கு ஒரு வருடம் தடை விதித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இரண்டு வருடங்களுக்கு அவர் கேப்டன் பதவியை ஏற்கவும் தடை கோரியுள்ளது.

இந்தத் தடை குறித்து பல்வேறு தரப்பினரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். அதில் மீம்ஸ் கிரியேட்டர்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. பல்வேறு மீம்ஸ் கிரியேட்டர்கள் ஸ்மித் செய்த தவற்றை வைத்து பலவிதமான மீம்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். எனவே, ஸ்மித் குறித்த தகவல்கள் அவ்வப்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் புலப்படுகிறது. அதில் நேற்று ஸ்மித்தின் வாழ்க்கை வரலாறு புத்தகம் குறித்து பயனர் செய்த ஒரு ட்விட் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘தி ஜெர்னி ஸ்டீவ் ஸ்மித்’ என்ற தலைப்பில் வெளியான இந்தப் புத்தகத்தின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,550. அந்தப் புத்தகத்தை ரூ.130க்கு ஒரு கடையில் விற்பனை செய்வதாக ஒரு பயனர் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அத்துடன் இனி இந்தப் புத்தகத்தை நிறைய பயனர்கள் படித்து ஸ்டீவ் ஸ்மித் உண்மையில் யார் எனத் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு எனப் பதிவிட்டிருந்தார். ஆனால், ஸ்டீவ் ஸ்மித்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் இன்னும் ஆன்லைனில் பழைய விலையில்தான் உள்ளது. எனவே, இதுவும் மீம்ஸ் கிரியேட்டர்களின் செயலா எனச் சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது.

இந்தப் புகைப்படத்துக்கு முன்னரே பிரிஸ்பேன் நகரில் உள்ள டைமாக் புத்தகக் கடையில் ஸ்டீவ் ஸ்மித் புத்தகத்தை ட்ரூ க்ரைம் (True Crime) பகுதியில் வைத்துள்ளதாக மற்றொரு பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon