மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 மா 2018

நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு: நீதிபதி புகார்!

நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு: நீதிபதி புகார்!

நீதித்துறையும் அரசும் இணைந்து செயல்படுவதென்பது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணியாகவே இருக்கும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மூத்த நீதிபதி செலமேஸ்வர். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலுள்ள 24 நீதிபதிகளும் ஒன்றிணைந்து விவாதிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் சரிவர நடைபெறவில்லை என்று கூறி போர்க்கொடி உயர்த்தினர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர். மருத்துவக் கல்லூரி அனுமதியில் ஊழல், நீதிபதி லோயா மரணம் உள்ளிட்ட பல வழக்குகளை உச்ச நீதிமன்றம் அணுகும் விதம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், மூத்த நீதிபதிகளுக்கு உரிய வழக்குகள் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இதன் பின்னர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நான்கு நீதிபதிகளையும் அழைத்துப்பேசி, உச்ச நீதிமன்றச் செயல்பாடுகளில் மாற்றம் வருமென உறுதியளித்தார். அதன் பின்னரே நிலைமை சீரானது.

தற்போது, மீண்டும் நீதிமன்றச் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாகக் கூறி தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார் நீதிபதி செலமேஸ்வர். இது தொடர்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். செலமேஸ்வர், தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கடிதத்தில், மத்திய அரசு நேரடியாக உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தொடர்பு கொண்டு உத்தரவிடுவதாகக் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள மற்ற நீதிபதிகள் இணைந்து விவாதிக்க வேண்டுமெனக் கூறி, தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகல்களை அவர்களுக்கும் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் மார்ச் 21ஆம் தேதி எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், கர்நாடகா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரிக்கு மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் நேரடியாகக் கடிதம் எழுதியிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கான பதிலை தீபக் மிஸ்ராவுக்கு மகேஸ்வரி அனுப்பியபோது, அதன் நகல் செலமேஸ்வருக்கும் சென்றிருக்கிறது. அதன் பிறகே இந்த விவகாரம் வெளியே தெரியவந்திருக்கிறது.

“மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியான பி.கிருஷ்ணா பட் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு அதில் கூறப்பட்டிருக்கிறது. அவர் மீதான குற்றச்சாட்டு இட்டுக்கட்டிய ஒன்று என கொலீஜியத்தில் ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு தரப்பட வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது. அந்தக் கோப்பு, மத்திய அரசின் வசம் இப்போதும் உள்ளது.

இந்த நிலையில், நீதிபதி சசிகலா என்பவர் அளித்த புகார் தொடர்பாக, மீண்டும் கிருஷ்ணா பட்டை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு சசிகலா நடத்தை சம்பந்தமாக விசாரணை செய்யுமாறு, கிருஷ்ணா பட் உத்தரவிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அந்த உத்தரவு அமலுக்கு வரும்போது, சசிகலா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுவிட்டு, கிருஷ்ணா பட் மீது புகார் செய்தார்.

இதுகுறித்து விசாரித்த நீதிபதி எஸ்.கே.முகர்ஜி, கிருஷ்ணா பட் மீது எந்த தவறும் இல்லை என்பதை உறுதிசெய்து, கொலீஜியத்துக்குப் பரிந்துரை செய்தார். தற்போது மீண்டும் புகார்தாரர் தனது புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையிலேயே, இந்த விவகாரம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது” என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சகம் ஏதேனும் சொல்ல விரும்பினால், உச்ச நீதிமன்றம் வழியாகத்தான் அணுக வேண்டுமென்று கூறியுள்ளார் செலமேஸ்வர். “உயர் நீதிமன்றங்களை அரசு நிர்வாகம் நேரடியாகத் தொடர்புகொண்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அது தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் குறித்தும் கேட்கும் நாள் தொலைவில் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே உருவாகும் நெருக்கமானது, ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி. நீதித்துறையும் அரசும் கண்காணிக்கும் அமைப்புகளே தவிர, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் அமைப்புகள் அல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிர்வாகம் நீதித்துறைக்குக் கட்டுப்படாததாகவும், பொறுமையின்றியும் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளைத் தலைமைச்செயலகத்தில் உள்ள பல்வேறு துறைத் தலைவர்களைப் போல மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன. நீதிபதிகளை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்த பின்பும், அரசு அவற்றை ஏற்றுக்கொள்வது விதிவிலக்காக மாறியுள்ளது. இதனால் திறமை மிகுந்தவர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவிகளை இழக்கின்றனர்.

நிர்வாகம் என்பது எப்போதுமே பொறுமை இல்லாததாக உள்ளது. இதன் காரணமாக திறமைவாய்ந்த நீதிபதிகளும், நீதிபதி பதவியைப் பெற வேண்டியவர்களும் தங்களுக்குக் கிடைக்க வேண்டியதை இழக்கின்றனர். எனவே, நீதித்துறையில் அரசு தலையிடும் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகளும் ஒன்றிணைந்து விவாதிக்க வேண்டும். அரசியல் சாசனப்படி உச்ச நீதிமன்றம் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்பதும் செலமேஸ்வர் கடிதத்தின் சாராம்சமாக அமைந்துள்ளது.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

சனி 31 மா 2018