மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சிறைக்குத் திரும்பும் முன் சசிகலா இட்ட உத்தரவுகள்!

சிறைக்குத் திரும்பும் முன் சசிகலா இட்ட உத்தரவுகள்!

கணவர் ம.நடராஜன் மறைவையொட்டி கடந்த மார்ச் 20ஆம் தேதி பரோலில் தஞ்சாவூர் வந்த சசிகலா, பரோல் காலம் முடிய ஐந்து நாள்கள் மீதம் இருக்கும் நிலையில் இன்று (மார்ச் 31) காலை பரபரப்பன அக்ரஹாரா சிறைக்குத் திரும்புகிறார் என்று தஞ்சையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடராஜன் மறைவையொட்டி பெங்களூரு சிறையில் இருந்து நேரடியாக ஓசூர் வழியாக தஞ்சாவூர் வந்த சசிகலா, கணவரின் வீடான அருளானந்த நகர் வீட்டில்தான் இத்தனை நாள்களும் தங்கியிருந்தார். நேற்று காலை நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சியோடு காரியங்கள் முடிந்த நிலையில் இன்று மீண்டும் சிறைக்குப் புறப்படுகிறார் சசிகலா.

முன்னதாக நேற்று மாலையில் தினகரன், திவாகரன், நடராஜனின் அண்ணன்கள் ஆகியோரை அழைத்து சசிகலா குடும்பப் பிரச்சினைகள் பற்றி விவாதித்தாகத் தெரிகிறது. மறைந்த நடராஜனுக்கு ஏராளமான சொத்துகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. நடராஜனுக்கு இறுதிச் சடங்கு செய்தவர் நடராஜனின் அண்ணன் எம்.ஆரின் மகனான எம்.ஆர்.ரங்கராஜன். எனவே சொத்துகள் அவருக்கே வர வேண்டும் என்று நடராஜனின் சகோதரர்கள் குடும்பத்தினர் வலியுறுத்துகிறார்களாம். தாங்கள் ஒரு டிரஸ்ட் மூலமாக இந்தச் சொத்துகளை நிர்வாகம் செய்துகொள்வதாக அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதாம்.

ஆனால், சொத்துகளில் குறிப்பிட்ட பகுதியை தினகரன் தரப்பினர் கேட்பதாகவும் கட்சி நடத்துவதற்கான செலவுகளை அதன் மூலம் சமாளிக்கலாம் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. நடராஜனின் சொத்துகளுக்கு யார் உரிமை கோரினாலும், சட்டப்படி இப்போது அந்தச் சொத்துகள் முழுதும் மனைவியாகிய சசிகலாவுக்கே வந்து சேரும். அவர் நினைத்தால்தான், அவர் கையெழுத்திட்டால்தான் சொத்துகளை மற்றவர்களுக்கு மாற்ற முடியும். இந்தச் சொத்து விவகாரமும் சில நாள்களாக அருளானந்த நகரில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறதாம்.

இதற்கிடையில் திவாகரனும் தன் மகனுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முக்கியப் பதவி வேண்டும் என்று சசிகலாவிடம் நேரடியாகவே கோரிக்கை வைத்திருக்கிறாராம். கணவர் இறந்த சில நாள்களில் கிளம்பிய இப்பிரச்சினைகளால் சசிகலா மேலும் தளர்வாகிவிட்டார் என்கிறார்கள்.

“குடும்ப ஒற்றுமைதான் இப்போது முக்கியம், மற்றதை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த அரசியல் தலைவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருங்கள். அவர்களது ஆதரவு நமக்கு எப்போதும் தேவை” என்றெல்லாம் குடும்பத்தினருக்கு சொல்லிய சசிகலா, அமமுகவின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் இன்று காலை கார் மூலம் தஞ்சையில் இருந்து நேரடியாக பெங்களூரு புறப்படுகிறார் சசிகலா.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon