மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

தொடங்கியது மீனவர்களின் போராட்டம்!

தொடங்கியது மீனவர்களின் போராட்டம்!

நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் இன்று (மார்ச் 31) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் மார்ச் 26ஆம் தேதி மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நான்கு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள். அந்தக் கோரிக்கைகள்:

- இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களை விடுதலை செய்யாமல் சிறையில் வைத்துள்ளது.

- தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடமிருந்து கைப்பற்றிய 184 விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும்.

- குந்துகாலில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் வேலையைத் துரிதப்படுத்த வேண்டும்.

- இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 31ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று போராட்டம் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் அருகே மீனவ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் போராட்டத்தினால் 800க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லாமல் உள்ளன. இதனால் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon