மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

அதிமுக உண்ணாவிரதம்: முதல்வர், துணை முதல்வர் பெயர் இல்லை!

அதிமுக உண்ணாவிரதம்: முதல்வர், துணை முதல்வர் பெயர் இல்லை!

காவிரி விவகாரம் குறித்து அதிமுக சார்பில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலில் முதல்வர் பெயரும், துணை முதல்வர் பெயரும் இடம் பெறவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்த நிலையில், அதற்கான பணிகளை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் தமிழக விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால் சில காரணங்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் வரும் 3ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று (மார்ச் 31) அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசின் செயல் சொல்லென்னா வேதனையையும், மன வலியையும் தருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தலைமையேற்கும் நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரப் போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்களின் பட்டியல் அதிமுக தலைமைக் கழகத்தில் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும், தேனியில் நத்தம் விஸ்வநாதனும், கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தலைமை தாங்குகின்றனர். மற்ற மாவட்டங்களில் அம்மாவட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெயரும் இடம்பெறவில்லை.

மேலும் அதிமுக சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கையெழுத்துக்களுடன் அவர்கள் பெயரில்தான் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்திற்கான அறிவிப்பு மட்டும் தலைமைக் கழகத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக உண்ணாவிரதம் நடத்தும் ஏப்ரல் 3ஆம் தேதியே கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon