மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சபரிமலையில் யானைக்கு மதம் பிடித்து 9 பேர் காயம்!

சபரிமலையில் யானைக்கு மதம் பிடித்து 9 பேர் காயம்!

சபரிமலையில் ஆராட்டு நிகழ்ச்சிக்காக சந்நிதானம் நோக்கி ஊர்வலம் சென்ற போது யானைக்கு மதம் பிடித்ததில் 9 பேர் காயம் அடைந்தனர்.

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று (மார்ச் 30) ஐயப்பனின் ஆராட்டு நிகழ்ச்சிக்காகப் பம்பையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் விக்ரகத்தைச் சுமந்தவாறு ஊர்வலமாகச் சந்நிதானம் நோக்கிப் புறப்பட்டனர். அந்த ஊர்வலத்தில் மேல்சாந்தியின் உதவியாளரான திருச்சூரை சேர்ந்த தினேஷ் (வயது 29) என்பவர் யானை மீது ஏறிப் பயணித்தார்.

ஊர்வலம் அப்பாச்சிமேடு பகுதியை வந்தடைந்தபோது, திடீரென யானைக்கு மதம் பிடித்து, மேல்சாந்தியின் உதவியாளரைச் சுமந்தவாறு வேகமாக ஓட ஆரம்பித்தது. பக்தர்கள் அலறியத்தவாறு அங்குமிங்கும் சிதறி ஓடினர். யானை மீதிருந்த மேல்சாந்தியின் உதவியாளர் கீழே விழுந்து அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. யானையை விரட்டி கட்டுக்குள் கொண்டுவர முயன்ற யானைப்பாகன் கிருஷ்ணகுமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்வலத்தில் வந்த ஒன்பது ஐயப்ப பக்தர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். யானை ஓடும் வழியில் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. காட்டிற்குள் ஓடிய யானையை பாகன்கள் காட்டிற்குள்ளேயே கட்டிவைத்து அதை சமாதானமடையச் செய்யும் வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். ஆனாலும், சந்நிதானத்தில் வழக்கமாக ஐயப்பனுக்கான ஆராட்டு நிகழ்ச்சி முறைப்படி நடந்து முடிந்தது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon