மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

இனி விளையாட மாட்டேன்: கண்ணீருடன் வார்னர்

இனி விளையாட மாட்டேன்: கண்ணீருடன் வார்னர்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்று (மார்ச் 31) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீருடன் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்தார்.

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பென்கிராஃப்ட் பந்தினைச் சேதப்படுத்திய வீடியோ பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களை விசாரிக்கும் முன்னதாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் இருவருக்கும் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிகக் குறைவு என ஹர்பஜன் சிங் மற்றும் பல்வேறு வீரர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்குத் திரும்ப அழைக்கப்பட்ட மூன்று வீரர்களுக்கு விசாரணை நடத்தப்பட்டு வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு காலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தடை விதித்தது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த வியாழனன்று (மார்ச் 29) செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் கண்ணீருடன் தான் செய்த தவறினை ஒப்புக்கொண்டார். அதேபோல் நேற்று (மார்ச் 30) சிட்னியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டேவிட் வார்னரும் தான் செய்த தவறினை கண்ணீர் மல்க ஏற்றுக்கொண்டார். ஆனால் அதனுடன் இனி ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர் இதுகுறித்து பேசும்பொழுது “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சக வீரர்கள், நிர்வாகம் மற்றும் தென்னாப்பிரிக்க அணி வீரர்களிடம் நான் செய்த தவறிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் ஏமாற்றிவிட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன்” எனக் கூறினார்.

மேலும் “அது உங்களைக் காயப்படுத்தி இருக்கும். அதற்காகவும் நான் மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எனது அணிக்காக விளையாடுவது பெருமையான ஒன்று. ஆனால் இது போன்ற தவறுகள் நடைபெறக்கூடாது என்பதால் இனி நான் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை” என்றும் தெரிவித்தார். அதனுடன் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு டேவிட் வார்னர் பதிலளிக்கவில்லை. விரைவில் தகுந்த பதிலளிப்பதாக மட்டும் அவர் தெரிவித்தார்.

வார்னர், ஸ்மித் இருவருக்கும் ஓராண்டு தடை விதித்ததை எதிர்த்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினைப் பதிவிட்டிருந்தார்.

அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் ரஷித் கானும் ஆதரவு தெரிவித்துள்ளார். வார்னர் அவரது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த பொழுது செய்தியாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்ப, வார்னரின் மனைவி கண் கலங்கி நின்றுகொண்டிருந்தார். அதனை எதிர்த்து ரஷித் கான் ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon