மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சினிமாவில் பாலியல் தொல்லை: நடிகைகள் மோதல்!

சினிமாவில் பாலியல் தொல்லை: நடிகைகள் மோதல்!

“சினிமாத் துறையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிகைகளை உறவுக்கு அழைப்பது என்று கூறுவது உண்மைக்கு மாறானது” என ரகுல் ப்ரீத் சிங்கும், “இல்லை அவர் கூறுவது பொய், திரைத் துறையில் செக்ஸ் டார்ச்சர் நடக்கிறது” என்று நடிகை மாதவி லதாவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளைப் பெரிய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உறவுக்கு அழைக்கிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. பாலியல் தொல்லைகளை நடிகைகள் தைரியமாக வெளியில் சொல்ல முன்வர வேண்டும்; அப்போதுதான் இந்தக் குற்றங்கள் குறையும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துப் பிரபலமான ரகுல் ப்ரீத் சிங் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். "வாய்ப்பு கேட்கும் நடிகைகளை உறவுக்கு அழைப்பதாகக் கூறப்படுவது உண்மைக்கு மாறானது. அப்படி எந்தத் தவறும் திரைப்பட உலகில் நடக்கவில்லை. நான் 4 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு அதுமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை" என்று கூறியுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்கின் கருத்துக்குத் தெலுங்கு நடிகை மாதவி லதா எதிர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துக் கூறியுள்ள அவர் "சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளைப் உறவுக்கு அழைக்கும் நிலைமை இருக்கிறது. ரகுல் பிரீத் சிங் அப்படி எதுவும் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர் பொய் சொல்கிறார். செக்ஸ் தொல்லைகளை வெளிப்படுத்தினால் பட வாய்ப்பு கிடைக்காது என்றும் சினிமாவிலிருந்து ஒதுக்கிவிடுவார்கள் என்றும் நடிகைகள் பயப்படுவதால் உண்மையைச் சொல்லத் தயங்குகிறார்கள். ஹாலிவுட் நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒன்றிணைந்திருக்கிறார்கள். இங்கு அந்த நிலைமை இல்லாதது துரதிர்ஷ்டம்" என்று தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

திரைப்பட உலகைப் பற்றி ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ள கருத்து உண்மைக்குப் புறம்பானது என சக நடிகை கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon