மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

கோயில்: செல்பேசி, பிளாஸ்டிக் தடை!

கோயில்: செல்பேசி, பிளாஸ்டிக் தடை!

கேரளாவில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் செல்பேசி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நாளை (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கக் கேரள அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள 1240 கோயில்களிலும் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், “கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் செல்பேசி எடுத்துச் செல்லவும், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்லவும் தடைவிதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் செல்பேசியைக் கோயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைத்துவிட்டுச் செல்லலாம். தற்போது, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் செல்பேசியை வைத்துச்செல்லச் சிறிய லாக்கர் அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அதுபோல், மற்ற கோயில்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். அதேபோல்,கோயிலில் அர்ச்சனை பொருட்கள் விற்கும் வியாபாரிகள் ஊதுபத்தி, கற்பூரம், எண்ணெய் போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் விற்கக்கூடாது. பூஜை பொருட்களை டப்பாக்களில் இருந்து அகற்றிச் சில்லறையாக விற்க வேண்டும்.

பக்தர்கள் பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பதிலாக எவர்சில்வர் பாத்திரங்களில் நெய், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கோயிலுக்குள் கொண்டுவந்து பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனை தட்டுகள், பொருட்களை எடுத்துச் செல்ல வாழை மட்டைகளைக் கொண்ட தட்டுகளைப் பயன்படுத்தலாம். இதனைத் தயாரிக்க குடும்பஸ்ரீ அமைப்புகள், சுய உதவிக் குழுக்களிடம் கேட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு, சபரிமலை செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், ப்ளாஸ்டிக் பைகள் எடுத்துச் செல்லக் கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

2016ஆம் ஆண்டு, ஜூலை மாதம் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளை பயன்படுத்துவது, விற்பனை செய்வது, கொள்முதல் செய்வது ஆகியவற்றுக்குக் கேரள அரசு தடை விதித்தது.

2017ஆம் ஆண்டு, ஓணம் பண்டிகையின் போது, கேரள மக்கள் 25 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடி, பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுத்தனர். அப்போது பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டது. அடுத்தகட்டமாக கேரள பள்ளிகளில் பிளாஸ்டிக் பேனாக்கள், பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தத் தடைவிதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon