மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

அணியை காப்பாற்றிய அரைசதங்கள்!

அணியை காப்பாற்றிய அரைசதங்கள்!

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்துள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 58 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்த நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக நேற்று (மார்ச் 30) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜானி பேர்ஸ்டவ் சதம் அடித்து அசத்தினார். அதன் தொடர்ச்சியாக களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறி வந்தனர். அதில் தொடக்க வீரர்கள் ஜீத் ரவேல் (5), மற்றும் டாம் லேதம் (0) இருவரும் குறைந்த ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனும் 22 ரன்கள் சேர்த்து வெளியேறி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராஸ் டைலர் (2), ஹென்றி நிக்கோலஸ் (0) இருவரும் உடனே பெவிலியன் திரும்பியதால் நியூசிலாந்து அணி 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது களமிறங்கிய பி.ஜே வாட்லிங் மற்றும் காலின் டீ கிராண்ட்ஹோம் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். காலின் டீ கிராண்ட்ஹோம் 72 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டுவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். பி.ஜே வாட்லிங் 77 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார். இரண்டாம் நாளான இன்று (மார்ச் 31) ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புமா எனப் பொறுத்திருந்து காண்போம்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon