மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

கண்டிப்பான ஆசிரியை: கண்ணீர் அஞ்சலி ஒட்டிய மாணவர்கள்!

கண்டிப்பான ஆசிரியை: கண்ணீர் அஞ்சலி ஒட்டிய மாணவர்கள்!

கேரளாவில் உள்ள கலைக் கல்லூரி ஒன்றில் முதல்வர் மிகவும் கண்டிப்பாக இருந்ததால், உயிருடன் இருக்கும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கண்ஹான்காத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்கள் முதல்வராகப் பணியாற்றிவந்த பி.வி. புஷ்பாஜா ஓய்வு பெறுவதை முன்னிட்டு வளாகத்தில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். மே 31ஆம் தேதி கல்லூரியில் ஒரு உத்தியோகபூர்வ விடைபெறும் சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோதே, இவருக்கு மலையாளத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், “மாணவர்களின் இதயத்தில் இறந்துவிட்ட கல்லூரி முதல்வருக்கு இறுதி மரியாதை. கஷ்டகாலம் முடிந்தது, இனி கல்லூரிக்கு சுதந்திரம் கிடைக்கப்போகிறது” என்று மலையாளத்தில் போஸ்டர் அடித்து கல்லூரியின் சுவர்களில் ஒட்டியுள்ளனர். இதில், இந்திய மாணவர் கூட்டமைப்புக்கும் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகப்படுகின்றனர்.

இது கல்லூரியின் ஒழுங்குமுறைக்கு முற்றிலும் எதிரானதாகும்; இந்த செயலில் ஈடுபட்ட மாணவர்கள் தினந்தோறும் வகுப்பறைகளில் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்லூரி மேலாளர் விஜய ராகவன் தெரிவித்துள்ளார்.

கல்லூரியின் முன்னாள் மாணவியான புஷ்பாஜா, அதே கல்லூரியில் 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி பின்பு, முதல்வர் என்ற பதவி அவருக்குக் கிடைத்துள்ளது.

"இந்த சம்பவம் என்னை அதிர்ச்சிகுள்ளாக்கியது. இதில், மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டுமா எனத் தெரியவில்லை” என புஷ்பாஜா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கும் இந்திய மாணவர் கூட்டமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; சில மாணவர்கள் செய்த தவறுக்காக அமைப்பை குற்றம் கூற முடியாது என இந்திய மாணவர் கூட்டமைப்பின் காசர்கோடு மாவட்டச் செயலாளர் கே.மகேஷ் தெரிவித்துள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon