மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

மத்திய அரசுக்கு முதல்வரின் முதல் எதிர்ப்பு!

மத்திய அரசுக்கு முதல்வரின் முதல் எதிர்ப்பு!

காவிரி விவகாரத்தில் மூன்று மாதம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு கடந்த 29ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், கர்நாடகத் தேர்தலைக் காரணமாகக் காட்டி மூன்று மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் இதற்குப் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துக் காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வழக்கு குறித்த வரலாற்றையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதில் பட்டியலிட்டுள்ளார்.

"மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், கடந்த 17 நாட்களாக அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சனையினை நாடாளுமன்றத்தில் எழுப்பியதன் விளைவாக, நாடாளுமன்றம் நடைபெறாமல் முடங்கியது. இருப்பினும், மத்திய அரசு இதுவரையில் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"ஆறு வார கால கெடு முடிந்த பிறகு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்பதற்கு விளக்கம் கேட்டு ஒரு மனுவினை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று தீர்ப்பு வழங்கிய பின்னர் உடனடியாக மத்திய அரசு விளக்கங்களைக் கோரியிருக்கலாம். மத்திய அரசின் இந்த மனுவானது, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை காவேரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு முரணானதாகும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, தமிழ்நாட்டின் சார்பில் வாதிட்டு வரும் மூத்த வழக்கறிஞர்கள், அனுமதிக்கப்படும் நிலையிலேயே இந்த மனுவினை நிராகரிக்கும் வகையில் வாதிடுமாறும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உடனடியாக அமைக்கத் தெளிவான உத்தரவினை மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய வகையிலும் உறுதிபட வாதங்களை எடுத்துரைக்குமாறும் வழக்குரைஞர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று கூறியுள்ள முதல்வர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சினையான காவேரிப் பிரச்சினையில், நமது உரிமைகளை நிலைநாட்டவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டுவரும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாகத் தொடர்ந்து மேற்கொள்ளும்" என்று உறுதியளித்துள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon