மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

மாணவர்களுக்கு சிவகார்த்தி கொடுத்த உறுதிமொழி!

மாணவர்களுக்கு சிவகார்த்தி கொடுத்த உறுதிமொழி!

விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்த சிவகார்த்திகேயன், இனி மது குடிப்பது போன்ற காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இளம் நடிகர்களுள் ஒருவராய் மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது இவர் பொன்ராம் இயக்கத்தில் சீமராசா, ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் பாணியிலான திரைப்படம் என பிஸியாக இருந்தாலும், கல்லூரி மாணவர்களுடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் பயன்படுத்திக்கொள்கிறார்.

சமீபத்தில் சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம், ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுப்போச்சுடா’ பாடலில் மது குடிப்பது போல நடித்துள்ளீர்களே என்று கேள்வி கேட்கப்பட்டது. உடனே அது குறித்து பதிலளித்த சிவகார்த்தி, "இனி அது போன்ற பாடல்களில் நடிக்கமாட்டேன். டாஸ்மாக் சீன் இடம்பெறும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன். நீங்கள் குறிப்பிட்ட பாடல் காட்சியில் பெண்களைக் கேலி செய்வது போன்ற வரிகள் இடம்பெற்றிருந்தன. அதனால் பெண்களைக் கேலிசெய்வது போல உள்ள காட்சிகள் இனிமேல் என் படங்களில் இடம்பெறாது. இனி ஐந்து வருடங்களுக்கு என்னைப் பார்த்து இந்தக் கேள்வியை நீங்கள் எழுப்பவே முடியாது. இயக்குநர்களும் இதனைப் புரித்துகொண்டு காட்சிகளை அமைக்க முன் வரவேண்டும்" என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற வேலைக்காரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்தி, இனிமேல் நான் விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறினார். தற்போது அவர் மது அருந்துவது போன்ற காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று மாணவர்கள் மத்தியில் கூறியிருப்பது அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon