மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

தமிழக அரசின் அவமதிப்பு வழக்கு : மனு விபரம்!

தமிழக அரசின் அவமதிப்பு வழக்கு : மனு விபரம்!

காவிரி மேலாண்மை வாரியம் ஆறு வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே தீர்ப்பில் தமிழகத்துக்கு சேரவேண்டிய காவிரித் தண்ணீரில் பத்து டிஎம்சியை குறைத்துவிட்டது உச்ச நீதிமன்றம். இதுவே தமிழகத்துக்கு மிகப்பெரிய அநீதி என்றபோதும், காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நினைத்து ஆறுதல் பட்டுக் கொண்டது தமிழகம்.

ஆனால் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு மார்ச் 29-ம் தேதிவரை மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், கெடு முடிந்த பின் விளக்கம் கேட்டு மனு செய்திருக்கிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 31) தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறது. தமிழக அரசின் மனுவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

விருப்பமற்ற ஒத்துழையாமை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு விஷயத்தில், ‘விருப்பற்ற ஒத்துழையாமை’யை மத்திய அரசு கடைபிடிப்பதாக அம்மனுவில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர் உமாபதி இம்மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

’’மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற பிப்ரவரி 16 தேதியிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது எந்த விதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில்... தாமதமாக மூன்று வாரங்களுக்குப் பிறகுதான், மத்திய அரசு மார்ச் 9-ம் தேதி காவிரிப் பாசன மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தையே கூட்டியது. மத்திய அரசின் இந்தக் கூட்டத்தால் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதேநேரம் தமிழ்நாடு அரசின் சார்பில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றும்படி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம். தமிழக அரசின் சார்பில் மார்ச் 13, மார்ச் 21, 23 ஆகிய தேதிகளில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினோம். வரும் ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் பாசனப் பருவம் தொடங்க இருப்பதையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினோம்’’ என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மீதான பாரபட்சம்

மேலும், “உரிய பருவத்தில் தமிழகத்துக்கான தண்ணீர் கொடுக்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் வெளிப்படையாக இருக்கிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அமைப்பதிலும் தாமதம் செய்வது என்பது தமிழ்நாட்டுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் காட்டப்படும் பாரபட்சம் ஆகும்.

எந்தவித முறையான காரணங்களும் இல்லாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காட்டும் தாமதம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீதான தனது விருப்பமின்மையை மத்திய அரசு தெரிவிப்பதாகவே கருதப்படும். எனவே இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நீரின்றி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகவும், சட்டத்தையும், அரசியல் அமைப்பு சாசனத்தையும் பின்பற்றுகிற தமிழகத்துக்கு தீர்வு காணவேண்டியும் இந்த மனுவை தாக்கல் செய்கிறோம்.

ஜூன் முதல் தமிழகத்தின் பாசனப் பருவம் தொடங்க இருக்கும் நிலையில் எவ்விதத் தாமதமும் இன்றி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon