மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: சிரித்துக் கொண்டே சிறைக்குச் சென்ற சசிகலா

டிஜிட்டல் திண்ணை: சிரித்துக் கொண்டே சிறைக்குச் சென்ற சசிகலா

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் இருந்து ஒரு பகுதியுடன் மெசேஜை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

“‘வீட்டுக்குள் இருந்தாலும், மனதளவில் சசிகலா அப்செட்டாகவே இருக்கிறாராம். நேற்று தனது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு பேசியவர், ‘15 நாள் பரோலில் வந்தால் 10 நாளில்கூட திரும்பி உள்ளே போகலாம் இல்ல... அதுல எதுவும் சிக்கல் இருக்கா?’ என விசாரித்தாராம். வழக்கறிஞர்களோ, ‘அதுல எதுவும் பிரச்னை இல்லம்மா... 15 நாளுக்குள் எப்போ வேணும்னாலும் போகலாம்...’ என்று சொல்லி இருக்கிறார்கள். சென்னைக்கு வராமல் தஞ்சாவூரிலிருந்து நாளையோ அல்லது திங்கள்கிழமையோ நேராக பெங்களூரு கிளம்பிவிடலாம் என சசிகலா நினைப்பதாகச் சொல்கிறார்கள். ‘குடும்பத்துக்குள் நடக்கும் நிகழ்வுகள் ஏதோ சின்னம்மாவை ரொம்பவே பாதிச்சிருக்கு. அதான் அவங்க உடனே ஜெயிலுக்கு திரும்பிப் போயிடணும்னு நினைக்கிறாங்க..’’ - இது நேற்று நான் சொன்ன தகவல்.

சொன்னபடியே இன்று காலை, தஞ்சாவூரில் இருந்து கிளம்பி சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைந்துகொண்டார் சசிகலா. முன்கூட்டியே சிறைக்குச் செல்ல வேண்டாம் என சசிகலாவிடம் எவ்வளவோ தினகரனும், குடும்பத்தினரும் பேசியிருக்கிறார்கள். ‘எனக்கு இங்கே நிம்மதி இல்லை. நான் உள்ளே இருக்கவே விரும்புறேன். அதுவும் இல்லாமல் இளவரசி உள்ளே தனியாக இருக்காங்க. நான் போனால்தான் அவங்களுக்கு பேச்சுத் துணைக்கு சரியா இருக்கும். என்னை யாரும் தடுக்க வேண்டாம்...’ என சொல்லியிருக்கிறார்.

கடைசியில் சசிகலா வீட்டிலிருந்து கிளம்பும் நேரத்தில், ‘நாங்க எதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுடுங்க. நீங்க பரோல் முடியும்வரை இருங்க. சென்னை போய்ட்டு அங்கிருந்து பெங்களூரு போயிக்கலாம்...’ என தினகரன் சொன்னாராம். அதற்கு சசிகலா, ‘எனக்கு யார் மேலயும் எந்த வருத்தமும் இல்லை. நான் வருத்தப்பட்டு இனி என்ன ஆகப் போகுது. எப்போ அக்கா போனாங்களோ அப்பவே எனக்கான மரியாதையும் போயிருச்சி. நான் எதையும் எதிர்ப்பார்க்கவும் இல்லை. யாருகிட்டயும் கோவிச்சுக்கவும் இல்ல.. கிளம்புறதுக்கான ஏற்பாட்டை செய்யுங்க...’ என சொல்லிவிட்டாராம்.

முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டவர்களின் கார் சசிகலாவின் காரைப் பின்தொடர்ந்து போயிருக்கிறது. சசிகலா பயணித்த காரில், தினகரன் மட்டும் உடன் இருந்தார். தஞ்சாவூரில் இருந்து திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழிதான் சசிகலாவின் பயண ரூட். வழியில் பல இடங்களில் சசிகலா வரும் தகவல் தெரிந்து அதிமுகவினர் குவிந்துவிட்டனர். நாமக்கல்லில் இருந்து நான்கு வழி பாதைதான். சேலம் நுழையும் இடத்திலிருந்தே எடப்பாடிக்கு ஏராளமான ப்ளக்ஸ் வைக்கப்பட்டு இருந்தது. அதையெல்லாம் உன்னிப்பாகப் பார்த்தார் சசிகலா.

திருவாகவுண்டனூர் பைபாஸ் அருகேதான் எடப்பாடி பழனிசாமி வீடு இருக்கிறது. அந்த ஏரியாவே புதுப் பொலிவுடன் சாலைகள் எல்லாம் பளபளத்தது. ‘இதுதான் எடப்பாடி வீட்டுக்குப் போற வழி..’ என தினகரன் காட்ட... அந்த வழியை திரும்பிப் பார்த்தார். அந்த இடத்திலும் ஏராளமான தினகரன் ஆதரவாளர்கள் கூடி நின்று, சின்னம்மா வாழ்க...’ என கோஷம் போட்டனர். காரை ஸ்லோ செய்யச் சொல்லி அவர்களைப் பார்த்துக் கும்பிட்டார் சசிகலா. எடப்பாடி அணியில் இருக்கும் அதிமுக தொண்டர்கள்கூட, சசிகலாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ரோட்டில் வந்து காத்திருந்ததை சேலம், தர்மபுரி பகுதிகளில் பார்க்க முடிந்தது.

வழக்கமாகப் பயணத்தில் காரை நிறுத்தி சாப்பிடாத சசிகலா, இந்த முறை சேலத்தைத் தாண்டியதும் ஏர்போர்ட் அருகே காரை நிறுத்தச் சொல்லி உள்ளே உட்கார்ந்தபடியே சாப்பிட்டார். தினகரன், டாக்டர்.வெங்கடேஷ்,பழனிவேல் ஆகியோரும் சசிகலா காருக்கு அருகே நின்று சாப்பிட்டனர். மதிய உணவை சேலத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ.வான எஸ்.கே.செல்வம் ஏற்பாடு செய்திருந்தார். சிறையில் இருந்து வரும்போது எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் வந்த சசிகலா, இப்போது திரும்பி சிறைக்குச் செல்லும் வழியில் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து வணக்கம் சொன்னதுடன், சிரிக்கவும் செய்தார். சரியாக 3.45 மணிக்கு சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றுவிட்டார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, இந்த ட்ரிப்பில் இளவரசி மகன் விவேக் மட்டும் மிஸ்ஸிங்...” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு, பதிலுக்குக் காத்திருக்காமல் ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon