மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

மீண்டும் போராட்டக் களமாகிய மெரினா!

மீண்டும் போராட்டக்  களமாகிய மெரினா!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதனையடுத்து இன்று(மார்ச் 31) காலை முதல் மெரினாவில் உள்ள கண்ணகி சிலை,விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், மெரினாவில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையும் மீறி மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களைக் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். போலீஸ் ஜீ ப்பில் அடைத்து கொண்டு செல்லும்போது நாங்கள் எங்களுக்காக போராடவில்லை. விவசாயிகளுக்காக போராடுகிறோம் எனக் கூறினர்.

இதனிடையே, போராட்டம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், சென்னை முழுவதும் போராட்டங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

கைதானவர்களில் ஒருவர் கூறுகையில், “நான் ஐசிஎப் பகுதியை சேர்ந்தவன். எனக்கு எந்தவிதமான பின்னணியும் கிடையாது. அரசியல் கட்சிகளின் தொடர்பும் கிடையாது. சமூக விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்பதே எனது ஒரே குறிக்கோள். இதற்காக, காலையிலிருந்து மாலை வரை உண்ணாவிரதம் இருந்து என்ன செய்வது, கடந்த நாற்பது நாட்களாக ஒன்றும் செய்யாமல், இன்றைக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்? எந்தவொரு உந்துதலும், இல்லாமல் உணர்வுடன் எழுந்த போராட்டம் இது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ”போராட்டம் நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை, அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்துங்கள்” என காவல் இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

சனி, 31 மா 2018

அடுத்ததுchevronRight icon