மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

காவிரி இல்லையென்றால் மின்சாரம் இல்லை!

காவிரி இல்லையென்றால்  மின்சாரம் இல்லை!

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், நெய்வேலியில் இருக்கும் என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி களமிறங்கியுள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் என்.எல்.சி. நிறுவனம் அமைந்திருக்கும் நெய்வேலியில் போராட்டம் இன்று(ஏப்ரல் 10) காலை தொடங்கியது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘காவிரி தண்ணீர் இல்லையென்றால் கர்நாடாகாவுக்கு கரன்ட் கிடையாது’ என்ற முழக்கத்துடன் வேல்முருகன் தலைமையேற்க நாம் தமிழர் கட்சி, விசிக, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

பல்லாயிரம் மக்கள் நெய்வேலி நகரத்தை ஸ்தம்பிக்கும் வகையில் மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிரான கோஷங்களுடன் ஊர்வலமாகச் சென்று கண்டன ஆர்ப்பாட்ட மேடையை அடைந்தார்கள்.

காவிரி கொடுக்காத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று முழங்கினார் வேல்முருகன்.

போராட்டக்காரர்களால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது என்று வடக்கு மண்டல ஐ.ஜி.ஶ்ரீதர் தலைமையில் விழுப்புரம் டி.ஐ.ஜி, கடலூர், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி,கள், உளுந்தூர்பேட்டை பட்டாலியன் போலீஸ், ஏ.ஆர்.போலீஸ் என சுமார் ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

செவ்வாய், 10 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon