மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

திருத்தம் : தென்னிந்திய நிதியமைச்சர்கள் சந்திப்பு : தமிழகம் புறக்கணிப்பு !

திருத்தம் : தென்னிந்திய நிதியமைச்சர்கள் சந்திப்பு : தமிழகம் புறக்கணிப்பு !

கேரள அரசு கூட்டியுள்ள தென்னிந்திய நிதியமைச்சர்கள் மாநாடு தொடர்பாக காலை பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் திருத்தமாக இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியின் ஒரு பகுதியை எந்த அடிப்படையில் பகிர்ந்தளிப்பது என்பதை ஆராய்ந்து ஒரு சூத்திரத்தை வழங்குவதற்காக நமது அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி 15ஆம் நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்குழுவிற்கான வரையறைகளை அளித்துள்ள ஒன்றிய அரசு, 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கக் கூறியுள்ளது.

தென் மாநிலங்களில் கடந்த 40 ஆண்டுகளாக மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுக்குள் வந்த நிலையில், வட மாநிலங்கள் கட்டற்ற மக்கள் தொகைப் பெருக்கத்தினால் எண்ணிக்கை அடிப்படையில் மிகப் பெரியதாக உருவாகியுள்ளன. மேலும், அவை வளர்ச்சியிலும் பின்தங்கியுள்ளன. தமிழகம் போன்ற தென் மாநிலங்களின் வளர்ச்சி ஒரு வளர்ந்த நாட்டுடன் ஒப்பிடத்தக்க அளவில் உள்ள நிலையில் வட மாநிலங்களின் வளர்ச்சி என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சியை ஒத்துள்ளன.

வட மாநிலங்களில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதனாலும் வளர்ச்சியில் பின்தங்கியதாலும் அவை ஒன்றியத் தொகுப்பில் இருந்து கூடுதல் நிதி பெறுகின்றன. ஆனால் தென் மாநிலங்களின் மக்கள்தொகை குறைவாக இருப்பதாலும் வளர்ச்சி கூடுதலாக இருப்பதாலும் ஒன்றியத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் பங்கு வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதியைப் பகிர்ந்தளித்தால் தென் மாநிலங்கள் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்கும். இதனை உணர்ந்த தென் மாநில அமைச்சர்களும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் தங்கள் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்துள்ளனர்.

இந்த முடிவு குறித்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும் கேரள அரசு கூட்டியுள்ள தென் மாநிலங்களின் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பது என்பது தமிழர்களுக்கு அது இழைக்கும் மாபெரும் அநீதி.

கேரள அரசும் அக்கறையில்லாத இந்த அரசுக்கு அழைப்பு விடுத்ததோடு அல்லாமல், தென்னிந்தியாவின் முதல் குரலாக ஒலித்த திமுகவுக்கு அழைப்பை விடுத்திருக்கலாம்.

செவ்வாய், 10 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon